கிராம பகுதியில் தென்படும் புலி, சிறுத்தை, கழுதை புலி
சாம்ராஜ் நகர்:புலியின் தாக்குதலால் அச்சத்தில் இருந்த குண்டுலுபேட் மக்கள், தற்போது கழுதை புலியும் தென்பட்டுள்ளதால், மேலும் பீதியடைந்து உள்ளனர்.சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களில், இரு பெண்கள் வெவ்வேறு இடங்களில், புலி தாக்கியதில் உயிரிழந்தனர். இதில் ஒரு புலியை பிடித்த வனத்துறையினர், மற்றொரு புலியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், குண்டுலுபேட்டின் சோமஹள்ளி கிராமத்தில், புலி ஒன்று வயல்வெளியில் அமர்ந்திருப்பதை, இக்கிராமத்தைச் சேர்ந்த மஹாலிங்கப்பா, தன் மொபைல் போனில் படம் பிடித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.வயல்வெளியில் புலிகள் இருப்பதால், வயல்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சப்படுகின்றனர். ராகவபுரா, மன்சஹள்ளி, யாதவனஹள்ளி, குருபரா ஹூண்டி, படகுரு, பரமபுரா உட்பட பல கிராமங்களில் புலி, சிறுத்தையை பார்த்ததாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், பண்டிப்பூர் புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட எலசெட்டி கிராமத்தில் நேற்று அறிய வகை 'கழுதை புலி' தென்பட்டது. இதை படம் பிடித்த கிராமத்தினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அழிந்து வரும் கழுதை புலி தென்பட்டதை அறிந்த வன விலங்கு ஆர்வலர்கள், சந்தோஷம் அடைந்துள்ளனர்.