எக்ஸ்பிரஸ் சாலையில் சுங்க கட்டணம் வசூல்
தங்கவயல்:சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் காரிடார், தங்கவயல் அருகே உள்ள கிருஷ்ணராஜபுரமில் இருந்து ஹொசக்கோட் செல்ல சுங்க கட்டணம் வசூல் நேற்று தொடங்கப்பட்டது. இந்த சாலையில் சில வாரங்களுக்கு முன்பு சுங்கக்கட்டணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று காலை கிருஷ்ணராஜபுரம் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் பூஜை போட்டனர். முன்னறிவிப்பு இல்லாமல், நேற்று காலை 8:45 மணி முதல், இந்த வழியே செல்லும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணராஜபுரம் சுங்கச்சாவடி மேலாளர் அல்லி பட்டேல் கூறுகையில், ''கிருஷ்ணராஜபுரம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலை துவக்கும்படி நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது. ''அதன்படி காலை 7:30 மணிக்கு ஆரம்பிக்க இருந்தோம். ஆனால் முறையாக பூஜைகள் செய்ததால் காலை 8:45 மணிக்கு துவக்கியுள்ளோம்,'' என்றார்.