உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெலகாவி நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியருக்கு தடை

 பெலகாவி நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியருக்கு தடை

பெலகாவி: பெலகாவி மாவட்டத்தில், பரவலாக மழை பெய்வதால் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் பாய்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒன்பது நீர் வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. பெலகாவி மாவட்டத்தின் கானாபுரா, ஜாம்போடி, கனகும்பி பகுதிகளில் கனமழை பெய்கிறது. எனவே, ஆறுகள், அணைகள், ஏரிகள், நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பொதுவாக மழைக்காலங்களில், நீர்வீழ்ச்சிகளை பார்க்க சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருவர். இது போன்று வரும் சுற்றுலா பயணியர், நீர் வீழ்ச்சிகளின் தன்மை மற்றும் ஆழத்தை அறியாமல், நீரில் இறங்கி அபாயத்தில் சிக்குகின்றனர். உள்ளூர் மக்களின் எச்சரிக்கையையும், சுற்றுலா பயணியர் பொருட்படுத்துவது இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கானாபுரா தாலுகாவின் பெடனே, சிகலே, சோர்லா, படவானே நீர் வீழ்ச்சிகள் உட்பட ஒன்பது நீர் வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியருக்கு தடை விதித்து, வனத்துறை உத்தரவிட்டுள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதைகளில், வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ரோந்து சுற்றி கண்காணிக்கின்றனர். உத்தரவை மீறி நுழைந்தால், வழக்கு பதிவு செய்வதாக எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !