பி.எப்., ஊழியர்களின் ரூ.70 கோடி ஆட்டை போட்ட இருவர் கைது
கப்பன் பார்க்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்களின் 70 கோடி ரூபாயை அபகரித்த வழக்கில், பெண் ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு, அசோக்நகர் ராஜாராம் மோகன் ராய் ரோட்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலேயே முன்னாள், இன்னாள் ஊழியர்களுக்கான சங்கம் செயல்படுகிறது.இந்த சங்கத்தில், முன்னாள் மற்றும் இன்னாள் ஊழியர்கள் வைப்பு நிதிக் கணக்கில், லட்சக்கணக்கில் பணத்தை டி பாசிட் செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வட்டி பணம் வரவு வைக்கப்படவில்லை. இதுபற்றி அவர்கள் விசாரித்தபோது, சங்க வங்கிக் கணக்கில் 3 கோடி ரூபாய் மட்டும் இருப்பது தெரிந்தது. 70 கோடி ரூபாய் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து கடந்த 1ம் தேதி, கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபிநாத், கணக்காளர் ஜெகதீஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவானது. தலைமறைவாக இருந்தவர்களை போலீசார் தேடினர். இதற்கிடையில் இந்த விவகாரத்தில், சங்க ஊழியர்கள் லட்சுமி, லிங்கேகவுடா, ராமானுஜம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. நேற்று முன்தினம் கோபிநாத், லட்சுமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள், தலைமறைவாக உள்ளவர்கள் வீடுகள், அலுவலகத்தில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.