வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அநீதி துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி கண்ணீர்
ஹாவேரி: வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி, மாவட்ட வளர்ச்சி கூட்டத்தில் துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி கண்ணீர் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி. இவர், ஹாவேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆவார். ஹாவேரி மாவட்ட வளர்ச்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ருத்ரப்பா லமானி பேசுகையில், ''நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே, வனப்பகுதியில் மக்கள் வசிக்கின்றனர். ஆனால், வன பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களை, வனத்துறையினர் அடித்து துரத்துகின்றனர். என் தொகுதியில் வனப்பகுதியில் வசித்த மக்களை, அங்கிருந்து காலி செய்யும்படி, வன அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து உள்ளனர். அந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. அவர்கள் எங்கு தான் செல்வர்,'' என்றார். அப்போது அவர் கண்ணீர் விட்டார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு தண்ணீர் கொடுத்து அதிகாரிகள் ஆசுவாசப்படுத்தினர். வனத்துறை ஊழியர்கள் மீது கோபம் அடைந்த, ஹாவேரி கலெக்டர் விஜய மகாந்தேஷ், ''வேண்டும் என்றே வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொந்தரவு கொடுப்பது ஏன்' என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க, ஹாவேரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவானந்த பாட்டீலிடம் பேசி முடிவு எடுப்பதாகவும் கலெக்டர் கூறினார்.