புலி பீதியில் கிராம விவசாயிகள் துப்பாக்கி பாதுகாப்புடன் அறுவடை
சாம்ராஜ்நகர்: புலிகளின் நடமாட்டத்தால் சாம்ராஜ்நகரின், பி.ஆர்.டி., புலிகள் சரணாலய சுற்றுப்பகுதி கிராமங்களில் மக்கள் பயத்துடன் வாழ்கின்றனர். துப்பாக்கி ஏந்திய வனத்துறை ஊழியரின் பாதுகாப்பில், பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்கின்றனர். சாம்ராஜ்நகரின், பி.ஆர்.டி., புலிகள் சரணால வனப்பகுதியின், புனஜனுார் - பேடகுளி இணைப்பு சாலையில், இரண்டு வாரங்களுக்கு முன், தாய்ப்புலி ஒன்று, தன் மூன்று குட்டிகளை விட்டு, காணாமல் போனது. தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், புலிக்குட்டிகளை மீட்டு, கூர்கல்லி விலங்குகள் சரணாலயத்துக்கு அனுப்பினர். தாய்ப்புலியை தேட துவங்கினர். வளர்ப்பு யானைகள், மோப்ப நாய் உதவியுடன், டிரோன் பயன்படுத்தி தேடியும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. கிராமங்களில் மக்கள், புலி பயத்துடன் வசிக்கின்றனர். சிறார்களை பள்ளிக்கு அனுப்பவும் அஞ்சுகின்றனர். வெளியே விளையாடவும் விடுவது இல்லை. தோட்டங்களில் கூலி வேலைக்கு செல்லவும் தயங்குகின்றனர். வயல்களில் புலியின் கால் தடங்கள் தென்படுவதால், வயலுக்கு செல்வதையே நிறுத்திவிட்டனர். வாழை, காய்கறிகள் உட்பட, பல்வேறு விளைச்சல்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. ஆனால் புலி பயத்தால், அறுவடைக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். சரியான நேரத்தில் அறுவடை செய்யாவிட்டால், பயிர்கள் பாழாகும் என்ற கவலையும் வாட்டுகிறது. இதை உணர்ந்த வனத்துறை அதிகாரிகள், விவசாயிகளின் உதவிக்கு வந்துள்ளனர். துப்பாக்கி ஏந்தி விவசாயிகளின் பாதுகாப்புக்கு செல்கின்றனர். விவசாயிகளும், கூலித்தொழிலாளர்களுக்கு தைரியம் கூறி, அறுவடைக்கு அழைத்து வருகின்றனர். வனத்துறையினர் துப்பாக்கியுடன், வயலை சுற்றி பாதுகாப்புக்கு நிற்கின்றனர். விவசாயிகள் நிம்மதியாக அறுவடை செய்கின்றனர். மற்றொரு பக்கம், தாய்ப்புலியை கண்டுபிடிக்கும் முயற்சியும் தொடர்கிறது. கூண்டு வைக்கப்பட்டுள்ளன. புலியின் கால் தடங்களை வைத்து, அதை தேடுகின்றனர்.