கொத்து கொத்தாக கோழிகள் பலியாவதால் கிராமத்தினர் பீதி
கொப்பால்: பி.ஹொசஹள்ளி கிராமத்தில், கோழிகள் திடீர் திடீரென இறக்கின்றன. பறவைக்காய்ச்சல் பரவி இருக்கலாம் என, கால்நடைத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கொப்பால் நகரின், பி.ஹொசஹள்ளி கிராமத்தில் கோழிகளுக்கு மர்மக்காய்ச்சல் பரவியுள்ளது. பண்ணை ஒன்றில், சில நாட்களில் மட்டும் நுாற்றுக்கணக்கான கோழிகள் திடீர் திடீரென உயிரிழக்கின்றன. இறந்த கோழிகளை பண்ணை ஊழியர்கள், ஏரியில் வீசியுள்ளதால், நோய் பரவும் என அஞ்சப்படுகிறது. பறவைக்காய்ச்சலால் கோழிகள் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இதுகுறித்து, கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளும் நேற்று முன் தினம், கிராமத்துக்கு வந்து, ஆய்வு செய்தனர். பண்ணைகளில் உள்ள கோழிகளை பார்வையிட்டனர். அவற்றுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய தயாராகின்றனர். ஏரிகளில் வீசப்பட்டுள்ள கோழிகளை அகற்றுகின்றனர். பண்ணை ஊழியர்களை எச்சரித்துள்ளனர். கோழிகள் அடுத்தடுத்து இறந்தால், கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்த கோழிகளை மண்ணில் புதைக்க வேண்டும். ஏரிகளில் வீசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கின்றனர். பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை எடுத்துள்ளனர்.