வக்கீலுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னை
பெங்களூரு: சட்டசபையின் பூஜ்ய நேரத்தில் எலஹங்கா பா.ஜ., உறுப்பினர் விஸ்வநாத் பேசியதாவது: க டந்த வாரம் சட்டசபையில் நான் பேசும் போது, முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு எதிராக, வக்கீல் ஜெகதீஷ் அவதுாறு பிரசாரம் செய்வது பற்றி கூறினேன். நான் அப்படி பேசிய பின், என் மீது அந்த வக்கீல் அவதுாறு தகவல் பரப்புகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு தர்மஸ்தலாவுக்கு சென்று வந்தேன். மஞ்சுநாதா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டேயிடம் இருந்து 100 கோடி ரூபாய் வாங்கியதாகவும், ஹெக்டேவின் குடும்பத்திற்கு சொந்தமான அல்லசந்திராவில் உள்ள நிலத்தை நான் சட்டவிரோதமாக வாங்கியதாகவும் ஜெகதீஷ் கூறுகிறார். நான் சட்டசபையில் பேசியதை வைத்து, வெளியில் என்னை விமர்சனம் செய்கிறார் . ஒரு எம்.எல்.ஏ.,வாக இங்கு என் பிரச்னையை பற்றி பேசுவது எனது உரிமை. இங்கு பேச முடியாவிட்டால், நான் எங்கு சென்று பேச வேண்டும். அந்த நபர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வக்கீல் தன்னை பற்றி அவதுாறு பரப்பியதற்கான ஆதாரங்களையும், சபாநாயகர் காதரிடம், விஸ்வநாத் சமர்பித்தார். அந்த ஆதாரங்களை சட்டசபையின் உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பி சம்பந்தப்பட்ட நபர் மீது, நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று, சபாநாயகர் காதர், சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், விஸ்வநாத்திற்கு உறுதி அளித்தனர்.