மாணவர் நலனுக்காக வாட்டர் பெல் கர்நாடக கல்வித்துறை ஆலோசனை
பெங்களூரு: பள்ளி சிறார்களுக்கு குடிநீர் இடைவெளி முறையை கர்நாடகாவில் அமல்படுத்த கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறார்களுக்கு அவ்வப்போது உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு நீர்ச்சத்து குறைவதும் காரணமாகிறது. வயிற்று வலி, தொண்டை வலி, தலைவலியால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கு விடுமுறை போடுகின்றனர். பள்ளிகளில் தண்ணீர் குடிக்க சிறார்கள் மறந்து விடுகின்றனர். இது அவர்களின் உடலில் நீர்ச்சத்து குறைய காரணமாகும். பள்ளிகளில் மாணவர்களை தண்ணீர் குடிக்க வைக்க நினைவூட்டும் நோக்கில், 'வாட்டர் பெல்' நடைமுறை, தமிழகம் உட்பட சில மாநிலங்களில் அமலில் உள்ளது. அதே போன்று கர்நாடகாவிலும், இத்திட்டத்தை அமல்படுத்த, கல்வித்துறை ஆலோசிக்கிறது. புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், பள்ளிகளில் காலை 10:35 மணி, மதியம் 12:00 மணி, மதியம் 2:00 மணிக்கு பெல் அடிக்கும். பெல் அடிக்கும்போது, மாணவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என உத்தரவிடப்படும். இதற்கு முன்பு 2019ல், இத்திட்டம் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது; முடியவில்லை. 2022ல் அன்றைய கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் முயற்சித்தார். இப்போது குடிநீர் பெல் திட்டம் செயல்படுத்த ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.