| ADDED : நவ 21, 2025 06:02 AM
வட கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் பிற மாநிலங்களுக்கு விவசாயிகள் குடிபெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது. வட கர்நாடகாவின் கொப்பால், ராய்ச்சூர், விஜயநகரா, பெல்லாரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நெல் அதிகளவு பயிரிடப்படுகிறது. இந்த மாவட்டங்களில் ஏறக்குறைய 300 அரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மேலும், விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையிலும் வயலில் வேலை செய்கின்றனர். இங்கு துங்கபத்ரா அணையிலிருந்து திறக்கப்படும் நீரை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. அப்படி இருக்கையில், துங்கபத்ரா அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட அரசு மறுத்து விட்டது. இதனால், இரண்டாவது சாகுபடிக்கு நெல் பயிரிட தயாராகி வந்த விவசாயிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர். தண்ணீர் திறந்துவிடும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாநில அரசு மவுனம் காத்து வருகிறது. இதனால், இந்த நான்கு மாவட்டங்களில் விவசாயத்தை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் ஆயிரக்கணக்கிலான விவசாயிகள் மஹாராஷ்டிரா, கோவா, தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். அதுபோல, அரிசி ஆலைகளில் பணிபுரிபவர்களும் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 'அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால் தங்கள் வாழ்க்கை பாதிக்கக்கூடும்' என, விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். - நமது நிருபர் -: