பெண் அதிகாரியை ஆபாசமாக திட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது எப்போது?
சிக்கபல்லாபூர்: பெண் அதிகாரியை ஆபாசமாக திட்டிய, காங்கிரஸ் பிரமுகர் ராஜிவ் கவுடா மீது, 16 வழக்குகள் இருப்பதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், சிக்கபல்லாபூர் எஸ்.பி., குஷால் சவுக் ஷி கூறினார். கர்நாடக வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் மகன் ஜயத்கான் நடித்துள்ள, 'கல்ட்' திரைப்படம் தொடர்பான பேனர், சிக்கபல்லாபூர் மாவட்டம் சித்லகட்டாவில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனரை அகற்ற நகராட்சி கமிஷனர் அம்ருதா கவுடா, கடந்த, 12 ம் தேதி உத்தரவிட்டார். அதனால், கோபம் அடைந்த சித்லகட்டா காங்கிரஸ் பிரமுகர் ராஜிவ் கவுடா, கடந்த, 14ம் தேதி அம்ருதாவிடம் மொபைல் போனில் ஆபாசமாக பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால், அவர் மீது வழக்கு பதிவானது; ஆனால், கைது செய்யப்படவில்லை. கைதில் இருந்து தப்பிக்க தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், சிக்கபல்லாபூர் எஸ்.பி., குஷால் சவுக் ஷி நேற்று கூறுகையில், ''நகராட்சி கமிஷனர் அம்ருதாவை ஆபாசமாக திட்டிய, காங்கிரஸ் பிரமுகர் ராஜிவ் கவுடா மீது, 16 வழக்குகள் உள்ளன. தலைமறைவாக உள்ள அவரை பெங்களூரிலும், ஆந்திராவிலும் தனிப்படை போலீசார் தேடிவருகின்ற னர். விரைவில் கைது செய்யப்படுவார்,'' என்றார்.