சித்தராமையாவை வளர்த்தது யார்? தேவகவுடா பேரன் நிகில் கிண்டல்!
மைசூரு: முதல்வர் சித்தராமையாவை அரசியல் ரீதியாக வளர்த்து விட்டதே என் தாத்தா தேவகவுடா தான்,'' என அவரது பேரன் நிகில் கிண்டலடித்து உள்ளார். மைசூரில் அவர் பேசியதாவது: அடுத்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். இதில், ம.ஜ.த., முக்கிய பங்காற்றும். என்னை யாராலும் அசைக்க முடியாது என்று கூறும் முதல்வர் சித்தராமையா, அவரை வளர்த்து விட்டவர்களையே மறந்து விட்டார். எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, வாக்குறுதி திட்டங்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில், ம.ஜ.த.,வை சேர்ந்த 54 எம்.எல்.ஏ.,க்கள் வேறு கட்சிக்கு தாவி உள்ளனர். சித்தராமையாவை பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதியளித்ததே தேவகவுடா தான். அப்போது, அவரை பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை என்றால், தற்போது அவர் முதல்வராகியிருக்க மாட்டார். சித்தராமையாவை வளர்த்துவிட்டதே தேவகவுடா தான். இவ்வாறு அவர் பேசினார்.