உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அடுத்த பா.ஜ., தலைவர் யார்? கட்சி மேலிடம் ஆலோசனை

அடுத்த பா.ஜ., தலைவர் யார்? கட்சி மேலிடம் ஆலோசனை

பெங்களூரு: மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவின் பதவி காலம் நவ., 10ல் முடிவடைய உள்ளது. அடுத்த தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. முதல்வராக இருந்த எடியூரப்பாவின் பதவி பறிக்கப்பட்டு, பசவராஜ் பொம்மைக்கு வழங்கப்பட்டது. அவரையும், அவரது சமூக மக்களையும் சமாதானப்படுத்தும் வகையில், 2023 நவ., 15ல் மாநில தலைவராக விஜயேந்திரா பதவியேற்றார். இதனால், தலைவர் பதவி எதிர்பார்த்திருந்த பசனகவுடா பாட்டீல் எத்னால், ஈஸ்வரப்பா ஆகியோர் கட்சி தலைமைக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி துாக்கினர். குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பா.ஜ.,விலேயே, முதன் முறையாக எம்.எல்.ஏ., ஆனவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினரும், சொந்த கட்சியினருமே அதிருப்தி தெரிவித்தனர். அத்துடன், தொடர்ந்து நடந்த இடைத்தேர்தல்களில் கட்சி தோல்வியை சந்தித்தது. இதற்கு விஜயேந்திராவும், கட்சி தலைமையுமே காரணம் என்று பசனகவுடா பாட்டீல் எத்னால், ஈஸ்வரப்பா ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர். இதனால், இருவரையும் கட்சி தலைமை ஆறு ஆண்டுகள் நீக்கியது. இந்நிலையில், மாநில பா.ஜ., தலைவர் பதவி, நவ., 10ல் காலியாக உள்ளது. இப்பதவியை பெற, சமீபத்தில் டில்லியில் உள்ள மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவின் அதிகாரபூர்வ இல்லத்தில், கர்நாடக மாநில பா.ஜ., முக்கிய தலைவர்கள் சிலர் கூடினர். அப்போது, மாநில தலைமை மாற்றம் மற்றும் புதிய தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அதே வேளையில், நடந்த முடிந்த நான்கு இடங்களுக்கான கர்நாடக மேல்சபை தேர்தலில், பா.ஜ., சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், மாநிலத்தில் தனது நிலையை நிலைநிறுத்த திணறி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !