மேலும் செய்திகள்
பெங்களூரில் இடி, மின்னலுடன் மழை
03-May-2025
பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு முழுதும் பெய்த மழையால், சாய் லே - அவுட் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வாகனங்கள் பழுதாகின. இதனால் குடியிருப்புவாசிகள் கடும் கோபம் அடைந்தனர். நாங்கள் வரி கட்டுவதற்கு எதற்காக, இது தான் கிரேட்டர் பெங்களூரு லட்சணமா என்று, அரசை திட்டி தீர்த்தனர்.கர்நாடக கடற்கரைகளில் இருந்து கிழக்கு மத்திய அரபிக்கடல் வரை, மேலடுக்கு சுழற்சி உருவாகி கொண்டு இருப்பதால், கர்நாடகாவின் அனைத்து பகுதிகளிலும் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது.ஆனால் நேற்று முன்தினம் மாலை, பெங்களூரு நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது. இரவு முழுதும் விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. நகர் முழுதும் பெய்த மழையால், சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல், போக்குவரத்து போலீசார் விழிபிதுங்கி நின்றனர். பாத்திரத்தில் பிடித்து...
கே.ஆர்.புரம் தொகுதிக்கு உட்பட்ட ஹொரமாவு சாய் லே - அவுட் குடியிருப்பை, மழைநீர், சாக்கடை கால்வாய் தண்ணீர் இணைந்து சூழ்ந்து கொண்டது. வீடுகளுக்குள் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளில் புகுந்த தண்ணீரை பாத்திரங்களில் பிடித்து மக்கள் வெளியே ஊற்றினர். இதனால் இரவு முழுதும் துாக்கமின்றி தவித்தனர். வீட்டிற்குள் இருந்த உணவு பொருட்கள் மழைநீரில் மூழ்கின. காய்கறிகள் அழுகின.உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விடலாம் என்று நினைத்து, பைக், கார்களை ஸ்டார்ட் செய்தால், இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் வாகனங்களை இயக்கவும் முடியவில்லை. மாநகராட்சியின் ஹெல்ப்லைன் நம்பருக்கு பல முறை அழைப்பு விடுத்தும் யாருமே அங்கு வரவில்லை. நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் சாய் லே - அவுட்டிற்கு வந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை மின்மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தினர். எதற்காக வரி
சாய் லே - அவுட்டில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின் போது, எங்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. வெள்ளம் சூழ்ந்ததும் ஆறுதல் கூறுகிறோம் என்ற பெயரில் வருகின்றனர். அடுத்த முறை இதுபோன்று நடக்காமல் பார்த்து கொள்கிறோம் என்று சொல்கின்றனர். ஆனால் ஒரு முயற்சி கூட எடுப்பதில்லை.மாநகராட்சி எதுவும் செய்யும் என்ற நம்பிக்கையும் இல்லை. எங்களது வாகனங்கள் பழுதாகி விட்டது. உணவு செய்து கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ளோம். நாங்கள் யாரிடம் சென்று எங்கள் பிரச்னையை கூறி அழுவது. ஆண்டுதோறும் வரி கட்டுகிறோம். இப்போது குப்பைக்கு கூட வரி விதிக்கின்றனர். எதற்காக வரி கட்டுகிறோம் என்று தெரியவில்லை. இங்கு சொந்த வீட்டில் வசிக்கிறோம். சொந்த வீட்டை விட்டுவிட்டு நாங்கள் எங்கு செல்வது. இது தான் கிரேட்டர் பெங்களூரின் லட்சணமா.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
03-May-2025