கணவர் மீது வரதட்சணை குற்றஞ்சாட்டிய மனைவி மீண்டும் இணைந்து வாழ கோரிய மனு தள்ளுபடி
பெங்களூரு: வரதட்சணை கொடுமை என்று பழி சுமத்தி விவாகரத்து பெற்ற மனைவி, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோலாரை சேர்ந்தவர்கள் சுமா - ரவி தம்பதி. இருவருக்கும் 2017ல் திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களில், பிறந்த வீட்டுக்கு வந்த சுமா, தன் கணவரும், அவரது குடும்பத்தினரும் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துகின்றனர். பணம் இல்லாமல் வர வேண்டாம் என்று கூறுகின்றனர். எனவே, தன்னை மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்கும்படி, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதேவேளையில், மனைவியின் கொடுமையில் இருந்து தனக்கு விவாகரத்து வழங்கும்படி கணவரும், குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இரு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சுமா மேல் முறையீடு செய்தார். அதில், 'விவாகரத்தை ரத்து செய்யும்படியும்; மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், 'திருமணமான மூன்றாவது நாளில், 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கணவரும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்துவதாக தனது பெற்றோரிடம் சுமா குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் கணவர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள்படி, திருமணத்துக்கு பின், கணவரை தன் அருகில் நெருங்க கூட சுமா அனுமதிக்கவில்லை. 'இது தொடர்பாக இருவரும் போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது நிரூபணமாகி உள்ளது. அத்துடன், கணவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்காமல், அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுகிறார். இந்த செயல் உண்மையிலேயே கொடூரமான செயல். எனவே, குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து, மனுதாரர் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என தெரிவித்தது.