மேலும் செய்திகள்
அத்துமீறும் தருணம்; கரணம் தப்பினால் மரணம்!
31-Jul-2025
சாம்ராஜ்நகர் : 'செல்பி' எடுக்க முயன்ற சுற்றுலா பயணியை, காட்டு யானை விரட்டியது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின் பண்டிப்பூரின் கெக்கனஹள்ளி செக்போஸ்ட் அருகில் உள்ள வனப்பகுதி சாலையில், நேற்று காலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது காட்டு யானை ஒன்று, சாலையில் நடமாடியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள், வாகனத்தை நிறுத்தி விட்டு யானையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இவ்வேளையில் சுற்றுலா பயணி ஒருவர், யானை அருகில் சென்று, 'செல்பி' எடுக்க முயற்சித்தார். இதனால் ஆவேசமான யானை, அவரை விரட்டத் துவங்கியது. அவரும் தப்பி ஓடியபோது, கால் தவறி கீழே விழுந்தார். விரட்டிய யானையின் கால்களுக்கு இடையே சிக்கிக் கொண்டார். யானை அவரை மிதிக்க முயற்சித்தது. திடீரென்று மனம் மாறி அவரை விட்டு விட்டு காட்டுக்குள் சென்றுவிட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணி, 'தப்பித்தோம், பிழைத்தோம்' என, அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை உருவானது. சுற்றுலா பயணியை யானை விரட்டியபடி வேகமாக ஓடியதும், அவரை மிதிக்காமல் விட்டுச் சென்ற வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி யது. 'வனப்பகுதி சாலையில் செல்லும்போது, விலங்குகளை பார்த்தால் வாகனங்களை நிறுத்த கூடாது. அவற்றை போட்டோ, வீடியோ எடுத்தால் அபாயம் ஏற்படும்' என, வனத்துறையினர் பலமுறை எச்சரித்துள்ளனர். வனப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவோருக்கு அபராதமும் விதித்துள்ளனர். ஆனால் இதை பொருட்படுத்தாமல், வனப்பகுதி சாலையில் வாகனங்களை சுற்றுலா பயணியர் நிறுத்தி பொழுதுபோக்குவது, விலங்குகளை போட்டோ, வீடியோ எடுக்க முற்படுகின்றனர். இவர்களின் செயல், வனத்துறையினருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
31-Jul-2025