நகராட்சி ஆகும் பங்கார்பேட்டை? தரம் உயர்த்த அரசு பரிசீலனை
பங்கார்பேட்டை: டவுன் சபையாக இருந்து வரும் பங்கார்பேட்டையை, தரம் உயர்த்தி நகராட்சியாக மாற்ற கர்நாடக அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.பங்கார்பேட்டை டவுன் சபையில் சில கிராமங்களை ஒருங்கிணைத்து நகராட்சியாக தரம் உயர்த்துமாறு டவுன் சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் கர்நாடக அரசிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.ஆனால், பங்கார்பேட்டையை நகராட்சியாக தரம் உயர்த்த சாத்தியம் இல்லை என, 2018 ஜூன் 19ல் கர்நாடக அரசு தெரிவித்தது.மக்கள் தொகை அடிப்படையில் 50,000க்கும் மேற்பட்டோர் வாழும் பகுதி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படலாம் என நகராட்சி சட்ட விதிகள் கூறுகின்றன.பங்கார்பேட்டையில் தற்போதைய மக்கள் தொகை 55,604. இதன் பரப்பளவு, 5.5 சதுர கிலோ மீட்டர். புதிதாக கிராம பகுதிகள் 4.1 சதுர கி.மீ., வரை இணைத்து கொண்டால் 9.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக உயரும்; மக்கள் தொகையும் 60 ஆயிரத்தையும் எட்டும்.இதை கணக்கில் கொண்டால் நகராட்சியாக தரம் உயர்த்த போதுமானதாக உள்ளது.பங்கார்பேட்டை பெரிய வர்த்தக மையம். ரயில்வே சந்திப்பும் உள்ளது. இங்கிருந்து தினமும் தமிழகம், ஆந்திரா, கேரளா உட்பட டில்லி வரை ரயில்கள் செல்கிற இடமாக உள்ளது.பங்கார்பேட்டையில் இருந்து தினமும் பெங்களூருக்கு 20 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். டவுன் சபையாக உள்ள பங்கார்பேட்டையை, நகராட்சியாக தரம் உயர்த்த அனைத்து வசதிகளும் உள்ளன.எனவே அரசுக்கு மீண்டும் கோரிக்கை எழுப்பலாம் என்று கோலார் மாவட்ட கலெக்டர் எம்.ஆர். ரவி ஆலோசனையின் பேரில், கர்நாடக அரசிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது.டவுன் சபையுடன் இணைப்புக்கு காத்திருக்கும் கிராமங்களில் பெங்கனுார், யலபுர்கி, காரஹள்ளி, தேஷியள்ளி ஆகிய நான்கு கிராமங்களில் 3,712 பேர் வாழ்ந்து வருவதாக மக்கள் தொகை விபரம் கணக்கு தெரிவிக்கிறது.இதுனால் பங்கார்பேட்டையும் நகராட்சி தகுதியை பெறும் என்ற நம்பிக்கை அங்குள்ளோருக்கு ஏற்பட்டுள்ளது. பங்கார்பேட்டையில் 40 சதவீதம் தமிழர்கள் வாழுகின்றனர். 25 டவுன் சபை உறுப்பினர்களில் 10 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.