அமைச்சர் யதீந்திராவின் துறை மாற்றப்படுமா?
- நமது நிருபர் - 'முடா' வழக்கில் செல்வாக்கு செலுத்த வாய்ப்பு உள்ளதால், அமைச்சர் யதீந்திராவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நகர்ப்புற மேம்பாட்டு துறையை, வேறு ஒருவருக்கு மாற்றி கொடுக்க வேண்டும் என, முதல்வர் சிவகுமாருக்கு, சமூக ஆர்வலர் வெங்கடேஷ் கடிதம் எழுதியுள்ளார். சித்தராமையா முதல்வராக இருந்த போது, முடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்தது தெரிந்தது. தனது செல்வாக்கை பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் வாங்கி கொடுத்ததாக சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தின் உத்தரவின்படி சித்தராமையா, பார்வதி உட்பட நான்கு பேர் மீது லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மைசூரை சேர்ந்த, 'ரியல் பைட்டர்ஸ் போரம்' என்ற அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேஷ், முதல்வர் சிவகுமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கர்நாடக நகர்ப்புற மேம்பாட்டு துறையின் கீழ், முடா வருகிறது. அங்கு நடந்த முறைகேடுகள் பற்றி விசாரணை நடக்கிறது. முடா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சித்தராமையாவின் மகன் யதீந்திராவுக்கு நகர்ப்புற மேம்பாட்டு துறை கொடுத்து இருப்பது சரியல்ல. அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பெற்றோரை பாதுகாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவருக்கு வேறு துறையை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து யதீந்திரா கூறுகையில், ''முடா வழக்கில் சித்தராமையா உட்பட, நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என்று, லோக் ஆயுக்தா போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதை நீதிமன்றம் ஏற்று கொண்டது. வழக்கில் நாங்கள் தலையிடவோ, செல்வாக்கு செலுத்தவோ இல்லை. இதனால் எனக்கு ஒதுக்கிய துறையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு கூடுதல் துறையும் ஒதுக்க வேண்டாம்,'' என்றார்.