உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வாலிபரை கொன்ற பெண்ணுக்கு 7 ஆண்டு

 வாலிபரை கொன்ற பெண்ணுக்கு 7 ஆண்டு

பெலகாவி: மொபைல் போன் கேட்டு கொடுக்கவில்லை என்ற காரணத்தால், பைக் பயணியை கத்தியால் குத்தி கொன்ற பெண்ணுக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து, பெலகாவி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர கன்னடா மாவட்டம், தண்டேலியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ பவன் பவார், 48. கடந்த, 2023 ஏப்., 30ம் தேதி, பெலகாவி நகரின் தோரகள்ளி கிராஸ் அருகே மதுபோதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நாகராஜ், 36, என்பவரை தடுத்து நிறுத்தினார். 'ஒருவரிடம் பேச வேண்டும். எனவே போன் கொடு' என்று கேட்டார். அதற்கு நாகராஜ், எதற்காக என்று கேட்ட போது, கோபமடைந்த ஜெயஸ்ரீ சத்தம் போட்டார். நாகராஜை திட்டினார். தான் வைத்திருந்த கத்தியால், நாகராஜின் மார்பில் குத்தினார். படுகாயம் அடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயஸ்ரீயை மார்க்கெட் போலீசார் கைது செய்து, மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையின் போது, ஜெயஸ்ரீ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்ததுடன், பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்கும்படி, மாவட்ட சட்ட சேவை ஆணையத்துக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !