நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரம்
பெங்களூரு :பெங்களூரில் நடைபாதைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரில் பல்வேறு இடங்களில், நடைபாதைகளை ஆக்கிரமித்து, வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற, நடவடிக்கை எடுத்துள்ளோம். நேற்று முன் தினம் கிழக்கு மண்டலத்தின், அரண்மனை சாலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், கற்கள், கழிவுப் பொருட்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அதே போன்று மேற்கு மண்டல பகுதிகளில், சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. மேக்ரி சதுக்கம், சி.வி.ராமன் சாலையிலும் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன. பேலஸ் குட்டஹள்ளி மேம்பாலத்தின் மேற்பகுதி, கீழ் பகுதிகளிலும் கழிவுகள் அகற்றி, சுத்தம் செய்யப்பட்டன. நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை, வரும் நாட்களிலும் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.