உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பாலியல் தொல்லை வழக்கில் எடியூரப்பாவுக்கு முன்ஜாமின்

பாலியல் தொல்லை வழக்கில் எடியூரப்பாவுக்கு முன்ஜாமின்

பெங்களூரு: பா.ஜ., முன்னாள் அமைச்சர் எடியூரப்பா, 81. பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் வைத்து 17 வயது சிறுமிக்கு, எடியூரப்பா பாலியல் தொல்லை அளித்ததாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் மீது சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை அரசு சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றியது.விசாரணை நடத்திய சி.ஐ.டி., அதிகாரிகள் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் எடியூரப்பாவிடம் விசாரிக்க மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், வழக்கில் முன்ஜாமின் கேட்டும் உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா முன்ஜாமின் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார்.

ஆய்வகம் உறுதி

விசாரணையின்போது அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரவிவர்மகுமார் வாதாடுகையில், ''மனுதாரருக்கும், அவர் மீது புகார் அளித்த பெண்ணிற்கும் இடையிலான மொபைல் போன் உரையாடல் ஆடியோ உண்மையானது என்பதை தடய அறிவியல் ஆய்வகம் உறுதிப்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தன் மகளுக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்து பணம் கொடுத்தார் என்று கூறி இருந்தார்.புகார்தாரர் உயிரிழக்கும் வரை எடியூரப்பா அமைதியாக இருந்தார். புகார்தாரர் இறந்த பின் வழக்கை ரத்து செய்ய கோரி மனு செய்கிறார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ய முடியாதது என்பதை கணக்கில் வைத்து செயல்படுகிறார். அவரை காவலில் எடுத்து விசாரித்து இருந்தால் கூடுதல் தகவல் வெளிவந்து இருக்கும்,'' என்று கூறி இருந்தார்.

மறுபரிசீலனை

எடியூரப்பா தரப்பு வக்கீல் நாகேஷ் வாதாடுகையில், ''புகார்தாரர் தன் மகளுடன் என் மனுதாரரை சந்திக்க சென்றார். மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். போலீஸ் கமிஷனரை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்கும்படி என் மனுதாரர் கூறினார். போலீஸ் கமிஷனரை சந்திக்க சென்றபோது, பாலியல் தொல்லை பற்றி ஏன் கூறவில்லை? இது சந்தேகத்தை எழுப்புகிறது. அரசியல் காரணங்களுக்காக என் மனுதாரர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை நேற்று ஒத்திவைத்திருந்தார்.நீதிபதி நாகபிரசன்னா நேற்று அளித்த தீர்ப்பின்போது, எடியூரப்பாவுக்கு முன்ஜாமின் வழங்கினார். குற்றப்பத்திரிகை அடிப்படையில் விசாரணை நடத்த கீழமை நீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து, அந்த நீதிமன்றமே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.இதனால் எடியூரப்பா நிம்மதி அடைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ