எட்டு மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்ட இளைஞர்
சிக்கமகளூரு: விபத்தில் காயமடைந்த இளைஞர், சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், எட்டு மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டார். சிக்கமகளூரு நகரின் அரநுாரு அருகில் நேற்று காலையில் வேகமாக சென்ற பைக், கட்டுப்பாட்டை இழந்து உருண்டதில், அதில் பயணித்த ஆல்துார் கிராமத்தை சேர்ந்த ரவி, 28, என்பவர் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவருக்கு, சிக்கமகளூரு மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கூடுதல் சிகிச்சைக்காக, மங்களூருக்கு அழைத்து செல்லும்படி கூறினர். அதன்படி, அவரை மங்களூரின் தனியார் மருத்துவமனைக்கு, அழைத்து சென்றனர். அங்கு, படுக்கை இல்லை; டாக்டர் இல்லை என, திருப்பி அனுப்பினர். வேறொரு மருத்துவமனைக்கு சென்றும், அங்கும் படுக்கை இல்லை என, கூறி சேர்த்துக்கொள்ள மறுத்தனர். அங்கிருந்து, முக்காவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலில், 80,000 ரூபாய் கட்டணம் செலுத்தினால், சிகிச்சை அளிப்பதாக கூறினர். கட்டட கட்டுமான கூலி வேலை செய்யும் குடும்பத்தினரால், அவ்வளவு பணத்தை உடனடியாக செலுத்த முடியவில்லை. இது போன்று எட்டு மருத்துவமனைகளுக்கு அலைந்தும், சிகிச்சை கிடைக்காததால், சாலை ஓரத்திலேயே ஆம்புலன்சை நிறுத்தி கொண்டு பரிதவித்தனர். வேறு வழியின்றி, ஆல்துார் கிராமத்துக்கே, அழைத்து சென்றனர். அங்குள்ள மக்கள், பெங்களூரின் 'நிமான்ஸ்' மருத்துவமனைக்கு, அவரை அழைத்து செல்லும்படி அறிவுறுத்தி, அனுப்பி வைத்தனர்.