உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / கவனத்தை ஈர்க்கும் சேமிப்பு பத்திரங்கள் முதலீடு 

கவனத்தை ஈர்க்கும் சேமிப்பு பத்திரங்கள் முதலீடு 

நிலையான வருமானம் நாடும் முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் மாறும் வட்டிவிகித பத்திரங்கள் பற்றி ஒரு கண்ணோட்டம்.ரிசர்வ் வங்கி வெளியிடும் மாறும் வட்டி விகித சேமிப்பு பத்திரங்களுக்கு வரும் அரையாண்டு காலத்திற்கான வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் வரையான காலத்திற்கு இந்த பத்திரங்களுக்கான வட்டி விகிதம் முந்தைய அரையாண்டில் இருந்தது போல, 8.05 சதவீதமாக மாற்றம் இல்லாமல் தொடர்வதாக அறிவித்துள்ளது. இந்த வட்டி விகிதம் காரணமாக இந்த பத்திரங்கள் ஈர்ப்புடையதாக அமைகின்றன. இவற்றில் முதலீடு செய்வதன் சாதகம் மற்றும் பாதகங்களை புரிந்து கொள்வது அவசியம்.

மாறும் வட்டி

அரசு சார்பில் ரிசர்வ் வங்கி பல்வேறு பத்திரங்களை வெளியிடுகிறது. இவற்றில், மாறும் வட்டி விகித பத்திரங்களுக்கான வட்டி விகிதம் முதலீடு காலத்தில், வட்டி விகித சூழலுக்கு ஏற்ப அமையும். இந்த பத்திரங்களின் வட்டி விகிதம் அரையாண்டுக்கு ஒரு முறை மாற்றப்படும். தேசிய சேமிப்பு சான்றிதழ்களுடன் இணைக்கப்பட்ட இப்பத்திரங்களுக்கான வட்டி விகிதம், இந்த சான்றிதழ் வட்டியை விட, 35 அடிப்படை புள்ளிகள் அதிகமாக இருக்கும். அரசு அளிக்கும் பாதுகாப்போடு, அதிக பலன் அளிக்கும் வாய்ப்பு கொண்டதாகவும் அமைவதால் இந்த பத்திரங்கள் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. இந்த பத்திரங்கள் ஏழு ஆண்டு கால முதிர்வு கொண்டவை. அரையாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும். இடையே விலக்கி கொள்ள முடியாது என்றாலும், மூத்த குடிமகன்களுக்கு மட்டும் நிபந்தனையோடு கூடிய விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த பத்திரங்கள் அளிக்கும் வட்டி வரி விதிப்புக்கு உட்பட்டது. முதலீடு வரி விலக்கிற்கு உரியது. இவற்றை பரிவர்த்தனை செய்யவோ, மாற்றவோ முடியாது. இவற்றை அடமானமாக வைத்தும் பணம் பெற முடியாது. குறைந்தபட்சம் 1,000 ரூபாயில் துவங்கி ஆயிரத்தின் பெருக்கலாக முதலீடு செய்யலாம். உச்சபட்ச வரம்பு கிடையாது. வங்கிகள் மூலம் எளிதாக முதலீடு செய்யலாம்.

பணமாக்கல்

நிலையான வருமானம் தரும் முதலீடுகளில் இந்த பத்திரங்கள் அதிக பலன் தரும் வாய்ப்புகளில் ஒன்றாக அமைகின்றன. எனினும் இந்த பத்திரங்கள், முதிர்வு காலத்திற்கு முன் விலக்கி கொள்ள முடியாதவை என்பதால், பணமாக்கல் தன்மை குறைவு. லாக் இன் கட்டுப்பாடு பாதகமான அம்சமாக அமைந்தாலும், இது சேமிப்பு ஒழுக்கத்தை அளிக்க வல்லதாக கருதப்படுகிறது. ஓய்வு கால திட்டமிடலுக்கு ஏற்றது. முன்கூட்டியே விலக்கி கொள்ள முடியாதது நீண்ட கால பலனை அளிக்க வல்லது. அதிக இடர் விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இந்த பத்திரங்கள் ஏற்றதாக கருதப்படுகின்றன. பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் பலன் அளிக்க வல்லவையாகவும் கருதப்படுகின்றன. வங்கி வைப்பு நிதியுடன் ஒப்பிடும் போது இவை அளிக்கும் பலன்கள் அதிகம். அதே நேரத்தில் சமபங்குகள் போன்ற அதிக பலன் அளிக்கும் முதலீடுகளுடன் ஒப்பிடும் போது அதிக இடர் இல்லாதவையாக அமைகின்றன. சந்தையின் ஏற்ற இறக்கம் பற்றி கவலையில்லாமல் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப இந்த பத்திரங்களை பரிசீலிக்கலாம். நிலையான வருமானம் மற்றும் பாதுகாப்பை நாடும் முதலீட்டாளர்களுக்கு இவை ஏற்றதாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ