ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை வீடு, வாகன கடனுக்கான வட்டி குறையாது
புதுடில்லி:வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி, 6.50 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இப்படி வட்டி மாற்றமின்றி தொடரும் என அறிவிக்கப்படுவது 11வது முறையாகும்.மும்பையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டத்தின் நிறைவில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட விபரங்கள் வருமாறு: ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவே தொடரும் வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம், 4.50 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது வங்கிகளிடம் ரொக்க கையிருப்பு 1.16 லட்சம் கோடி ரூபாய் அதிகரிக்கும்; எளிதாக கடன் வழங்க முடியும் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி குறித்த கணிப்பு, 7.20 சதவீதத்திலிருந்து 6.60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது நடப்பு நிதியாண்டுக்கான பணவீக்க கணிப்பு, 4.50 சதவீதத்திலிருந்து 4.80 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது மற்ற வளரும் நாடுகளின் கரன்சியுடன் ஒப்பிடுகை யில், இந்திய ரூபாய் குறைவான ஏற்ற, இறக்கங்களையே சந்தித்துஉள்ளது நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பரை விட, அக்டோபர் - மார்ச் மாதங்களில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது செயற்கை நுண்ணறிவின் முறையான பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில், வழிகாட்டுதல்களை வடிவமைக்க, விரைவில் நிபுணர் குழு அமைக்கப்படும் பொதுமக்களுக்கு தகவல் வழங்குவதை பரவலாக்கும் நோக்கில், 'பாட்காஸ்ட்'கள் அறிமுகப்படுத்தப்படும் அடுத்த பணக் கொள்கை குழு கூட்டம், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 5 முதல் 7ம் தேதி வரை நடைபெறும்.பிணையற்ற விவசாய கடன் வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வுபிணையம் ஏதுமின்றி பெறப்படும் விவசாயக் கடனுக்கான உச்ச வரம்பை, 2 லட்சம் ரூபாயாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. தற்போது இது 1.60 லட்சம் ரூபாயாக உள்ளது. உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, சிறு விவசாயிகளின் நலனை காக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.ஐ., டிபாசிட்டுக்கு அதிக வட்டிரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிற நாட்டு நாணய டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க, டாலரை விற்பதில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வருகிறது. இதனால், கடந்த சில வாரங்களாகவே அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வருகிறது. எனவே, அன்னிய கரன்சி டிபாசிட்களை அதிகரிக்கும் நோக்கில், எப்.சி.என்.ஆர்., 'பி' பிரிவு 1 - 5 ஆண்டுகள் வரையிலான டிபாசிட்களுக்கு, வட்டியை 150 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த, வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. யு.பி.ஐ., வாயிலாக கடன் சிறு நிதி வங்கிகளுக்கு அனுமதிஸ்மால் பைனான்ஸ் வங்கிகளும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பு வரை யு.பி.ஐ., வாயிலாக கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கு எளிதாகவும்; குறைந்த செலவிலும் கடன் கிடைப்பதை இது உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.