சேமிப்பு கணக்கை துவக்குவது நிதி பயணத்தில் முதல் படியாக அமைகிறது. கையில் உள்ள பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும், இன்னும் பிற வசதிகளை பெறவும் சேமிப்பு கணக்கு உதவுகிறது. சேமிப்புத்தொகைக்கு ஏற்ற வட்டியும் கிடைக்கிறது. எனினும் வங்கி சேமிப்பு கணக்கை முறையாக கையாள்வது அவசியம். சேமிப்பு கணக்கு வழங்கும் பல்வேறு அம்சங்களை அறிந்திருப்பதும், அவற்றை திறம்பட கையாள்வதும் கூடுதல் பலனை அளிக்கும். அந்த வகையில் வங்கி சேமிப்பு கணக்கின் மூலம் மேம்பட்ட பலனை பெறுவதற்கான வழிகளை பார்க்கலாம்.வட்டி விகிதம்:
சேமிப்பு கணக்கிற்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்தை கவனிக்க வேண்டும். இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம். வைப்பு நிதி உள்ளிட்டவற்றை விட, சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் குறைவு. எனினும், வட்டி விகிதத்தின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். அதிக வட்டி விகிதத்திற்கு மாறும் வாய்ப்பு உள்ளிட்டவற்றை பரிசீலிக்கலாம்.
குறைந்த பட்ச தொகை:
பெரும்பாலான சேமிப்பு கணக்குகள் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச தொகை நிபந்தனை கொண்டிருக்கலாம். இதை அறிந்திருப்பதோடு, இந்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும். குறைந்த தொகையை பராமரிக்கத் தவறுவது அபராதத்திற்கு வழிவகுக்கும்.கண்காணிப்பு:
சேமிப்பு கணக்கு பரிவர்த்தனைகளை தொடர்ந்து கவனித்து வர வேண்டும். வரவு செலவுகளை கண்காணிக்க இது உதவுவதோடு, தவறான பிடித்தம் அல்லது இதர கட்டணங்களை அறியவும் கைகொடுக்கும். பல்வேறு வகை கட்டணங்கள் பொருந்தும் என்பதால், உங்கள் பரிவர்த்தனை பழக்கங்களுக்கு ஏற்ற சேமிப்பு கணக்கு இருப்பது நல்லது.டிஜிட்டல் சேவைகள்:
மொபைல் வங்கிச் சேவை, இணையவங்கி வசதி உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வங்கிகள் அளிக்கின்றன. இவற்றை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கணக்கை நிர்வகிக்கவும், பில் தொகைகளை செலுத்தவும், முதலீடு செய்யவும் வங்கி அளிக்கும் சேவைகளை பயன்படுத்தி பலன் பெறலாம்.கூடுதல் சலுகைகள்:
வங்கிகள் வாடிக்கையாளர்கள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. வட்டி விகிதத்தில் முன்னுரிமை சலுகை, சிறப்பு தள்ளுபடிகள், பிரத்யேக சலுகைகள் போன்றவை இதில் அடங்கும். உங்கள் தேவைக்கேற்ப இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். நிதி இலக்குகளை அடைவதில் சேமிப்பு கணக்கு பராமரிப்பும் முக்கிய அங்கம் வகிக்கிறது.