உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் நிதி தீர்மானங்கள்

வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் நிதி தீர்மானங்கள்

புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில், தீர்மானங்களும், திட்டமிடலும் பெரும்பாலானோரது மனதில் இருக்கும். திட்டமிடல் எதிர்காலத்திற்கான பாதை அமைத்து தருவதோடு, தெளிவான அணுகுமுறைக்கும் உதவும். அதிலும் பொருளாதார உலகம் வேகமான மாற்றங்களை கண்டு வரும் நிலையில், திட்டமிடல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.வரவு - செலவு கணக்கு துவங்கி, சேமிப்பு இலக்குகள் என எல்லாவற்றுக்கும் திட்டமிடல் அவசியம். புத்தாண்டு தீர்மானங்கள் இதற்கு பொருத்தமான வழியாக அமைகின்றன. நிதி திட்டமிடலை மேம்படுத்த உதவக்கூடிய நிதி தீர்மானங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

சேமிப்பு கலை:

பட்ஜெட்டை தீவிரமாக கடைப்பிடிப்பது என்பதே முதல் தீர்மானமாக அமைய வேண்டும். பட்ஜெட்டை பின்பற்றுவது, வரவுக்குள் செலவை அடக்கி சேமிக்க வழி செய்கிறது. வீண் செலவுகளை தவிர்ப்பதும் சாத்தியமாகிறது. ஏற்கனவே பட்ஜெட் இல்லையெனில், இந்த ஆண்டு முதல் பட்ஜெட்டை பின்பற்றுவது நல்லது.

தானியங்கி வசதி:

பட்ஜெட்டை தீர்மானித்த போது மாதாந்திர பொறுப்புகளையும், முதலீடு முடிவுகளையும் தானியங்கி மயமாக்க வேண்டும். பில் தொகை உரிய காலத்தில் செலுத்தப்பட வழி செய்வதோடு, எஸ்.ஐ.பி., போன்ற சீரான முதலீடு உத்திகளையும் பின்பற்ற வேண்டும்.

அதிக முதலீடு:

சேமிப்பையும், முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும். சீரான முதலீடு முறை ஏற்றது என்றாலும், நிதி இலக்குகளை நோக்கி முன்னேற முதலீட்டை அதிகரிக்க வேண்டும். எனவே, சீரான முதலீடு தொகையை அதிகரிப்பது அவசியம். இதற்கான வழிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடனில் கவனம்:

கடன் பொறுப்புகள் இருந்தால், கடன் சுமையை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு கடன், அதிக வட்டி கடன் போன்றவற்றை அடைக்க வேண்டும். வீட்டுக்கடன் இருந்தால், அசலில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதற்காக திட்டமிடுவது நல்லது.

விரிவாக்கம்:

செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் தாக்கம் செலுத்தி வருகிறது. இது, வேலைவாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்தும். எனவே, பணியில் இருப்பவர்கள் திறன் வளர்ச்சி மேம்பாட்டில் கவனம் செலுத்துவது நல்லது. முதலீட்டிலும் விரிவாக்க உத்தியை பின்பற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை