உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / பொதுத்துறை வங்கிகளில் உயரும் அன்னிய முதலீடு உச்ச வரம்பை 49% ஆக உயர்த்த அரசு பரிசீலனை

பொதுத்துறை வங்கிகளில் உயரும் அன்னிய முதலீடு உச்ச வரம்பை 49% ஆக உயர்த்த அரசு பரிசீலனை

புதுடில்லி: பொதுத்துறை வங்கிகளில், அன்னிய முதலீடுகளின் உச்ச வரம்பை 49 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டில், தற்போதைய நடைமுறையில் பொதுத்துறை வங்கிகளில் அன்னிய முதலீட்டு உச்ச வரம்பு 20 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், இந்த வரம்பை உயர்த்துவது தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே மத்திய நிதி அமைச்சகத்தின் தரப்பில் ரிசர்வ் வங்கியுடன் பேச்சு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்திய வங்கித்துறை மீதான வெளிநாட்டு நிறுவனங்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எஸ் பேங்க்கின் 25 சதவீத பங்குகளை ஜப்பானை சேர்ந்த எஸ்.எம்.பி.சி., வங்கி 22,372 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. ஆர்.பி.எல்., வங்கியின் 60 சதவீத பங்குகளை 26,400 கோடி ரூபாய்க்கு வாங்க துபாயை சேர்ந்த என்.பி.டி., வங்கி முன்வந்து உள்ளது. இவை இரண்டும் தனியார் வங்கிகள் எனும் நிலையில், பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்யவும் அன்னிய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை பயன்படுத்தி உச்ச வரம்பை உயர்த்தும்பட்சத்தில், வரும் ஆண்டுகளில் இந்த வங்கிகள் கூடுதல் மூலதனம் திரட்ட உதவியாக இருக்கும் என அரசு கருதுகிறது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் அன்னிய முதலீடுகளுக்கு இடையிலான வித்தியாசத்தை குறைக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மேலும் கூறப்படுகிறது. தற்போதைய நடைமுறையில், தனியார் வங்கிகளில் 74 சதவீதம் வரை அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று நிதியாண்டுகளாக நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் கூடுதலாக உள்ளதால், கடன் தேவை அதிகரித்துள்ளது. இது இந்திய வங்கிகளில் முதலீடு செய்ய அன்னிய முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி 12 பொதுத்துறை வங்கிகளின் மொத்த சொத்து மதிப்பு 171 லட்சம் கோடி ரூபாய் வங்கித்துறையின் மொத்த சொத்து மதிப்பில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 55 சதவீதம் அன்னிய முதலீடுகளின் உச்ச வரம்பு 49 சதவீதமானாலும், அரசிடம் 51 சதவீத பங்குகள் இருக்கும் தன்னிச்சையாக முடிவெடுப்பதை தவிர்க்க, ஒரு முதலீட்டாளரின் அதிகபட்ச வாக்குரிமை 10% ஆக தொடரும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !