அக்டோபரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்வு
புதுடில்லி:அக்டோபர் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், ஒன்பது சதவீதம் அதிகரித்து, 1.87 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக, மத்திய அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், 1.72 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டது. அது இந்த ஆண்டின் அக்டோபரில் 1.87 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், மத்திய ஜி.எஸ்.டி., 33,821 கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டி., 41,864 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., 99,111 கோடி ரூபாயாகவும் உள்ளது. ஜி.எஸ்.டி., மீதான சர்சார்ஜ் எனப்படும் கூடுதல் வரியாக 12,550 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.அக்டோபரில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரி, 19,306 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுஉள்ளதாகவும், இது ஓராண்டுடன் ஒப்பிடுகையில் 18.20 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.