உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / உங்களுக்கான நிதி திட்டமிடலை உருவாக்கிக்கொள்வது எப்படி?

உங்களுக்கான நிதி திட்டமிடலை உருவாக்கிக்கொள்வது எப்படி?

நிதி விஷயங்களை முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்வது நிதி திட்டமிடலாக அமைகிறது. எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய நிதி திட்டமிடல் வழி செய்கிறது. நன்கு உருவாக்கப்பட்ட நிதி திட்டம், நீண்ட கால இலக்குகளை அடைய வழிவகுப்பதோடு, எதிர்பாராத நெருக்கடிகளை சமாளிக்கவும் உதவுகிறது. மேலும், செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகமாக்கவும் வழிகாட்டுகிறது. நிதி பயணத்திற்கான திசை காட்டியாகவும் அமையும் நிதி திட்டமிடலை சிறந்த முறையில் மேற்கொள்ளும் வழிகளையும், அதன் முக்கிய அம்சங்களையும்இங்கே பார்க்கலாம்.

நிதி இலக்குகள்:

ஒருவருடைய குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை அடைய பொருத்தமான உத்திகளை கொண்டுள்ள வழியாக நிதி திட்டம் அமைகிறது. ஓய்வு கால திட்டமிடல், முதலீடு திட்டமிடல், வரி திட்டமிடல் என பல்வேறு பிரிவுகளை கொண்டுள்ளன. ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்ப இதன் அம்சங்கள் மாறுபடலாம்.

உங்கள் திட்டம்:

வலுவான நிதி திட்டமிடலுக்கு சீரான உத்திகள் அவசியம். முதலில், ஒருவர் தனக்கான குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை அறிந்திருக்க வேண்டும். எதிர்கால இலக்குகளை வகுத்துக் கொள்வது, அவற்றை அடைவதற்கான வியூகம் மற்றும் உத்திகளை உருவாக்கிக் கொள்ள வழிகாட்டும்.

கடன் ஆய்வு:

தற்போதைய நிதி நிலையை அறிய கடன் பொறுப்பு களை கவனிக்க வேண்டும். கடன் பொறுப்புகளை குறைப்பதற்கான வழிகளை கண்டறிந்து அவற்றை செயல்படுத்த வேண்டும். அதே போல, செலவுகளை கண்காணிக்கத் துவங்கி, அத்தியாவசிய செலவுகளை கண்டறிந்து, வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும்.

பண நிர்வாகம்:

நிதி திட்டமிடலில் பண நிர்வாகம் முக்கிய அம்சம். கடனில் இருந்து விடுபட்டு, மாதந்தோறும் சேமிக்கும் நிலையை அடைவது நல்லது. மாத பட்ஜெட்டை வகுத்துக்கொண்டு பின்பற்ற வேண்டும். முதலீடுகளில் கவனம் செலுத்தும் முன், அவசரகால நிதியை உருவாக்கிக் கொள்வதும் அவசியம்.

ஓய்வு காலம்:

ஒவ்வொருவர் நிதி சூழல், இலக்குகளுக்கு ஏற்ப சேமிப்பு, முதலீடுகளை திட்டமிட வேண்டும். ஓய்வு கால திட்டமிடல் அம்சங்களோடு, வரி சேமிப்பையும் மனதில் கொள்ள வேண்டும். தேவை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திட்டம் அமைந்திருக்க வேண்டும். தேவை எனில் தொழில் முறை ஆலோசனையை நாடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !