| ADDED : ஜன 17, 2024 11:27 PM
புதுடில்லி:'கூகுள் பே' நிறுவனம், யு.பி.ஐ., சேவைகளை வெளிநாடுகளிலும் விரிவுபடுத்த, 'என்.பி.சி.ஐ., இண்டர்நேஷனல் பேமென்ட்ஸ்' நிறுவனத்துடன், புரித்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இனி இந்திய சுற்றுலாப் பயணியர், மற்ற நாடுகளில் தங்களின் கூகுள் பே வாயிலாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வழி வகுக்கும்.இதன் காரணமாக, ரொக்க பணத்தை எடுத்துச் செல்லவோ, பிற நாடுகளின் பேமென்ட் செயலிகளை உபயோகிக்க வேண்டிய தேவையோ பெரும்பாலும் தவிர்க்கப்படும். இதுகுறித்து, கூகுள் பே நிறுவனம் தெரிவித்து உள்ளதாவது:இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய பயணியர், யு.பி.ஐ., சேவைகளைப் பயன்படுத்துவதை விரிவுபடுத்த முயல்கிறது. அடுத்ததாக, மற்ற நாடுகளில் யு.பி.ஐ., போன்ற டிஜிட்டல் பேமென்ட் முறைகளை நிறுவுவதற்கு உதவி புரிந்து, தடையற்ற நிதி பரிவர்த்தனைகளுக்கு, ஒரு மாதிரியை வழங்குகிறது. இறுதியாக, யு.பி.ஐ., உள்கட்டமைப்பை பயன்படுத்துவதன் வாயிலாக, நாடுகளுக்கு இடையேயான பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இதனால் எல்லை தாண்டிய நிதி பரிமாற்றங்களும் எளிதாக்கப்படுகிறது.இவ்வாறு தெரிவித்துள்ளது.