வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்துக்கு கூடுதல் சர்சார்ஜ் வசூலிக்க எதிர்ப்பு
சென்னை:தொழிற்சாலைகளை உள்ளடக்கிய உயரழுத்த பிரிவினர், வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு, 10 காசு கூடுதல் சர்சார்ஜ் விதிக்கும் மின்வாரியத்தின் முடிவுக்கு, எதிர்ப்பு எழுந்துஉள்ளது.தமிழக மின்வாரியம், 150 கிலோவாட் வரை தாழ்வழுத்தப் பிரிவிலும், அதற்கு மேல் உயரழுத்த பிரிவிலும் மின் இணைப்புகளை வழங்குகிறது. தாழ்வழுத்தப் பிரிவில் வீடு, கடை போன்றவையும்; உயரழுத்தப் பிரிவில் தொழிற்சாலை, நுாற்பாலை என, அதிக மின்சாரம் பயன்படுத்தும் இணைப்புகளும் உள்ளன. உயரழுத்தப் பிரிவினர், வாரியத்திடம் இருந்து மட்டுமின்றி, வெளிச்சந்தையிலும் மின்சாரம் வாங்குகின்றனர். இந்த மின்சாரத்தை எடுத்துவர, வாரியத்தின் மின்வழித்தடங்களை பயன்படுத்துகின்றனர். இதற்காக, 'வீலிங் சார்ஜ், சர்சார்ஜ்' உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன. இது, 1 யூனிட்டுக்கு 1.96 ரூபாயாக உள்ளது. அதனுடன் சேர்த்து, கடந்த டிச., 12 முதல், 2025 மார்ச் வரை யூனிட்டுக்கு, 54 காசு கூடுதல் சார்ஜ் வசூலிக்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதை நிர்ணயம் செய்ய, தொழில்முனைவோரிடம் கருத்து கேட்கப்பட்டது. பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கூடுதல் சர்சார்ஜ் விதித்து, ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், வரும் ஏப்., 1 முதல் செப்., 30ம் தேதி வரை, வெளிச்சந்தை மற்றும் மூன்றாம் நபரிடம் இருந்து வாங்கப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு, 10 காசு கூடுதல் சர்சார்ஜ் விதிக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு ஆணையத்திடம் அனுமதி கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கும் தொழில் துறையினரிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, தொழில் துறையினர் கூறியதாவது:வாரிய மின்சார விலை அதிகம் இருப்பதால் தான், வெளிச்சந்தையில் வாங்கப்படுகிறது. இதற்கு, மின்வாரிய வழித்தடத்தை பயன்படுத்துவதற்கு, தனி கட்டணமும் செலுத்தப்படுகிறது. அதற்கு மேல் கூடுதல் சர்சார்ஜ் விதிப்பது எந்த வகையில் நியாயம்? ஏற்கனவே, மின் கட்டணம் உயர்வு, தொழில் வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, வரும் மார்ச்சுக்கு பின், கூடுதல் சர்சார்ஜ் வசூலிக்கப்படாது என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், கூடுதலாக ஆறு மாதங்களுக்கு கூடுதல் சர்சார்ஜ் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை வாரியம் திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.