உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 26–கார்பனுக்கும் இனி ஒரு தொழில் மதிப்பு

26–கார்பனுக்கும் இனி ஒரு தொழில் மதிப்பு

ஒரு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையை இதுவரை கழிவாகவே பார்த்தோம். அந்தப் புகையில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடுக்கும் தொழில் மதிப்பு உருவாகலாம் என்ற எண்ணம், அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture, Utilisation and Storage – CCUS) எனப்படும் தொழில்நுட்பத்தில், தொழிற்சாலைகளில் உருவாகும் கார்பன்-டை-ஆக்சைடு வளிமண்டலத்துக்குச் செல்வதற்கு முன்பே பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் அதைச் சேமிக்கலாம் அல்லது குறிப்பிட்ட தொழில்துறை பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம். சிமென்ட், எக்கு, உரம், ரசாயனம் போன்ற துறைகளில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது எளிதானது அல்ல. அந்தத் துறைகளுக்கான தீர்வுகளில் கார்பன் பிடிப்புத் தொழில்நுட்பம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கார்பன்-டை-ஆக்சைடைப் பிடித்த பிறகு அதை எதற்குப் பயன்படுத்த முடியும்? சில தொழில்நுட்பங்களில் அதை ரசாயனப் பொருட்கள், செயற்கை எரிபொருட்கள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் “கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது” என்ற சுற்றுச்சூழல் நோக்கத்துடன், “பிடிக்கப்பட்ட கார்பனிலிருந்து பொருளாதார மதிப்பு உருவாக்குவது” என்ற புதிய தொழில் நோக்கமும் இணைகிறது. ஒரு தொழிற்சாலையில் கார்பனைப் பிடிப்பதற்கு தனி கருவிகள் தேவை. அதற்கான உறிஞ்சும் பொருட்கள் (Capture Materials), பிரித்தெடுக்கும் அமைப்புகள், குழாய்கள், அழுத்தக் கட்டுப்பாடு, அளவீட்டு உணரிகள், தரவு கண்காணிப்பு மென்பொருள் என பல்வேறு தொழில்நுட்பங்கள் தேவைப்படும். இதனால் கார்பன் பிடிப்பு என்பது ஒரு கருவியை விற்பனை செய்யும் தொழிலாக மட்டும் இருக்காது. தொழிற்சாலையின் புகை வெளியேற்றத்தை அளவிடும் நிறுவனத்திலிருந்து, கார்பனைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் உருவாக்கும் நிறுவனங்கள் வரை நீளமான தொழில் சங்கிலி உருவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ