மொஹிட்டோ, லெமனேடு பானங்களுக்கு 40% ஜி.எஸ்.டி.,
புதுடில்லி: 'மொஹிட்டோ, ரோஸ் லெமனேடு' போன்ற, பழச்சாறு கலக்காத, மது அல்லாத தயார்நிலை பானங்களுக்கு 40 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படும் என மேற்கு வங்க ஜி.எஸ்.டி., முன்கூட்டிய தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது. கொல்கட்டாவை சேர்ந்த 'சேஜ் ஆர்கானிக்ஸ்' நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், 'எங்களது தயாரிப்புகள் ஆடம்பர பொருட்களோ அல்லது உடல்நலனுக்கு கேடு விளைவிப்பவையோ அல்ல; இவை சர்க்கரையற்ற, உடல்நலனை மேம்படுத்தும் பானங்கள். எனவே, இவற்றுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., மட்டுமே விதிக்க வேண்டும்' என வாதிட்டது. ஆனால், வருமான வரித்துறையின் வாதத்தை ஏற்று, ஆணையம் 40 சதவீத ஜி.எஸ்.டி.,யை உறுதி செய்துள்ளது. மேலும் அது தெரிவித்துள்ளதாவது: 'மொஹிட்டோ, ரோஸ் லெமனேடு, குக்கும்பர் மின்ட் மற்றும் லிச்சி வைட்டமின் வாட்டர்' போன்ற தயார்நிலை பானங்களுக்கு 40 சதவீத ஜி.எஸ்.டி., பொருந்தும். நீர் கலந்து குடிக்கக்கூடிய மாங்காய், எலுமிச்சை மின்ட் போன்ற பான கலவைகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., பொருந்தும். தயார்நிலை பானங்களில் உண்மையான பழச்சாறோ அல்லது பழக்கூழோ இல்லை. எனவே, சுங்க வரி சட்டத்தின்படி, இவற்றை 'பழச்சாறு பானங்கள்' என்ற பிரிவில் சேர்க்க முடியாது. மாறாக, இவை 'சுவையூட்டப்பட்ட தண்ணீர்' அல்லது 'காற்றுாட்டப்பட்ட பானங்கள்' என்ற பிரிவின் கீழ் வருவதால் 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது. ஆணையத்தின் தீர்ப்பு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டுமே சட்டப்படி பொருந்தும் என்றாலும், இதுபோன்ற பிற வழக்குகளில் வரித்துறை இதனை ஒரு முன்னுதாரணமாக கொள்ள முடியும்.