ஆந்திர தொழில் மாநாட்டில் 410 ஒப்பந்தங்கள் எதிர்பார்ப்பு
விஜயவாடா: விசாகப்பட்டினத்தில் இந்த வாரம் நடைபெறவுள்ள, சி.ஐ.ஐ.,யின் பார்ட்னர்ஷிப் மாநாட்டில், 9.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 410 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என, ஆந்திர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அமைச்சர் நாரா லோகேஷ் கூறியதாவது: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித வடிவிலேயே இருக்கின்றன; செயல்பாட்டுக்கு வருவதில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அதுபோன்ற ஒப்பந்தங்களில் ஆந்திர அரசு கையெழுத்திடுவதில்லை; குறிப்பிட்ட கால வரம்பில் செயல்படுத்தத்தக்க ஒப்பந்தங்களில் மட்டுமே இணைகிறோம். விசாகப்பட்டினத்தில், வரும் 14, 15ம் தேதிகளில் நடைபெறவுள்ள, சி.ஐ.ஐ.,யின் பார்ட்னர்ஷிப் மாநாட்டில் 410 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அவற்றின் வாயிலாக, 9.80 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்படும். 22 நாடுகளை சேர்ந்த குழுக்கள் இதில் பங்கேற்கவுள்ளன. கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள் அனைத்தும் 12 மாதங்களுக்குள் துவங்கப்படும். மொத்த ஒப்பந்த திட்டங்களும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் செயல்படத் துவங்கும். ஸ்டீல் துறையில் கூடுதல் காலம் தேவை என்பதால், அந்நிறுவனங்கள் மட்டும் ஏழு ஆண்டுகளுக்குள் துவங்கப்படும்.