உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மருத்துவ காப்பீடு வாங்கும் போது செய்யக்கூடாத 5 தவறுகள்

மருத்துவ காப்பீடு வாங்கும் போது செய்யக்கூடாத 5 தவறுகள்

மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதோடு, பாலிசியை நிர்வகிப்பதும் சிக்கலாகி வருகிறது. தேவைக்கேற்ற சரியான பாலிசியை தேர்வு செய்வது முதல், பாலிசி அம்சங்கள், விலக்குகள் என பல விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. மேலும், பாலிசி கோரிக்கை நிராகரிக்கப்படாமல் இருப்பதற்கான அம்சங்களில் கவனம் செலுத்துவதும் அவசியமாகிறது. பாலிசிக்கான பிரிமியம் தொகையும் அதிகரித்து வருகிறது. பாலிசி விஷயத்தில் தவிர்க்க வேண்டிய தவறுகளும் இருக்கின்றன. அந்த வகையில் மருத்துவ காப்பீடு வாங்கும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள் இவை:

குழு காப்பீடு:

பலரும் மருத்து காப்பீடு தேவையை உணர்ந்திருந்தாலும் பாலிசி பெறுவதில்லை. பணியாற்றும் நிறுவனங்கள் சார்பில் குழு காப்பீடு இருப்பதை இதற்கு காரணமாக சொல்கின்றனர். ஆனால், குழு பாதுகாப்பு விரிவானதும் அல்ல, போதுமானது அல்ல. தனிநபர்கள் தேவைக்கேற்ற மருத்துவ காப்பீடு அவசியம்.

வசிப்பிடம்:

பாலிசி பெறும் பலரும், தங்கள் வசிப்பிடத்தை முக்கியமாக கருதுவதில்லை. மெட்ரோ நகரங்களில் வசித்தால் அதிக காப்பீடு பாதுகாப்பு தேவை என்பதை உணர வேண்டும். ஏனெனில் இங்கு சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகள் அதிகம். காப்பீடு நிறுவனங்களும் இதற்கேற்ப பிரிமியம் தொகையை நிர்ணயிக்கின்றன.

நிபந்தனைகள்:

பாலிசி ஆவணங்களில் பொடி எழுத்துக்களில் இடம்பெறும் விதிகள், நிபந்தனைகளை பலரும் கவனமாக படிப்பதில்லை. அறை வாடகை வசதி, விலக்குகள், காத்திருப்பு காலம் உள்ளிட்டவை தொடர்பான அம்சங்களை நிபந்தனைகள் மூலமே தெரிந்து கொள்ள முடியும். பாலிசியை முழுமையாக புரிந்து கொள்வது அவசியம்.

பிரிமியம் தொகை:

பலரும் பிரிமியம் தொகையை முதன்மையாக கருதுகின்றனர். எனினும் பிரிமியம் தொகை தவிர காப்பீடு அளிக்கும் பாதுகாப்பின் அளவு, கிளைம் வரலாறு போன்ற அம்சங்கள் முக்கியம். குறைந்த பிரிமியமத்தில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. பாதுகாப்பு போதுமானதாக அமைய வேண்டும்.

மருத்துவ வரலாறு:

காப்பீடு பெற தேவையான தகவல்களை சமர்பிக்கும் போது மருத்துவ வரலாறு தொடர்பான எந்த தகவலையும் மறைக்க கூடாது. ஏற்கனவே உள்ள நோய்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்காமல் இருப்பது பின்னர் கோரிக்கை நிராகரிக்கப்படும் நிலையை உண்டாக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை