ரூ.80,000 கோடி முதலீடு என்.டி.பி.சி., திட்டம்
புதுடில்லி:தேசிய அனல் மின் நிறுவனமான என்.டி.பி.சி., 6,400 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் திட்டங்களை நிறைவேற்ற, 80,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. என்.டி.பி.சி.,யின் நிறுவப்பட்ட ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறன், கடந்த செப்.,30ம் தேதி நிலவரப்படி, 76,443 மெகா வாட் ஆக உள்ளது. நேற்று நடைபெற்ற இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில், பல்வேறு அனல் மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பங்கு சந்தையில் என்.டி.பி.சி.,தெரிவித்துள்ளதாவது:தெலுங்கானாவில் 29,345 கோடி ரூபாய் செலவில், 2,400 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கவும்; ம.பி.,யின் காதர்வாராவில் 20,446 கோடி ரூபாய் செலவில், 1,600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கவும்; பீஹாரின் நபி நகரில் 29,948 கோடி ரூபாய் செலவில், 2,400 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கவும் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.