செமிகண்டக்டர் ஊக்குவிப்பு நிதியில் 97 சதவீத தொகை ஒதுக்கப்பட்டு விட்டது
புதுடில்லி:இந்தியாவில் செமிகண்டக்டர் தயாரிக்க முன்வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஒதுக்கப்பட்டுள்ள 65,000 கோடி ரூபாயில், 97 சதவீத தொகையை வழங்குவதற்கான திட்டங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, மத்திய மின்னணுவியல் துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 'இந்தியன் செமிகண்டக்டர் மிஷன்' திட்டத்துக்கு மத்திய அரசு 76,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க 65,000 கோடி ரூபாயும்; பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் அமைந்துள்ள செமிகண்டக்டர் ஆய்வகத்தை புதுப்பிக்க 10,000 கோடி ரூபாயும்; சிப் வடிவமைக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 1,000 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் டில்லியில் நடைபெறவுள்ள செமிகான் இந்தியா 2025 மாநாடு குறித்த விளக்க கூட்டத்தில் கிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது: சிப் தயாரிப்புக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு ஒதுக்கியுள்ள 65,000 கோடி ரூபாயில், 62,900 கோடி ரூபாயை வழங்குவதற்கான திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நிதியில் இரண்டு அல்லது மூன்று சிறிய திட்டங்களுக்கு மட்டுமே ஊக்கத்தொகை வழங்க முடியும். இத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு, மாநாட்டில் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. செமிகான் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக நிதிஅமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார். மீதமுள்ள நிதியில் இரண்டு அல்லது மூன்று சிறிய திட்டங்களுக்கு மட்டுமே ஊக்கத்தொகை வழங்க முடியும்