உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சென்னையில் அனிமேஷன் துறைக்கு 6 மாதத்தில் சிறப்பு மையம் அமையும்

சென்னையில் அனிமேஷன் துறைக்கு 6 மாதத்தில் சிறப்பு மையம் அமையும்

சென்னை:''தமிழகத்தின் கல்வி, வணிகம், நிதிசார் துறைகள் பயன்பாட்டின் தேவைக்கேற்ப, புதிய 'ஏவிஜிசி-எக்ஸ்.ஆர்' கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது,'' என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். இந்திய கேம் டெவலப்பர்ஸ் சங்கம் சார்பில், 12வது மாநாட்டின் இரண்டாவது நாள் நேற்று நடந்தது. இதில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்துக்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாநாட்டில் உதயநிதி பேசியதாவது: உற்பத்தி மற்றும் சேவை துறைகளை ஒருங்கே ஊக்குவிப்பதன் வாயிலாக, தமிழகத்தை ஒரு தேசிய தகவல் தொழில்நுட்ப மையமாக முதல்வர் ஸ்டாலின் நிலைநிறுத்தி வருகிறார். இதன் வாயிலாக 11.19 சதவீத ஜி.டி.பி., வளர்ச்சியை தமிழகம் அடைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 10,800க்கும் மேற்பட்ட 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் தமிழகத்தில் உருவாகி உள்ளன. அடுத்தகட்டமாக 'அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ்' துறைகள் இருந்து வருகின்றன. இதன் வளர்ச்சியை மையமாக கொண்டு, தமிழகத்தின் புதிய 'ஏவிஜிசி - எக்ஸ்.ஆர்' கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் கல்வி, வணிகம், நிதிசார் துறைகள் பயன்பாட்டின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக தமிழகம் சர்வதேச கிரியேட்டிவ் மையமாக மாறும். இதற்காக அடுத்த ஆறு மாதங்களுக்குள் சென்னையில் ஒரு சிறப்பு மையம் அமைக்கப்படும். அதன் பின் கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மண்டல மையங்கள் உருவாக்கப்படும். எல்காட் நிறுவனத்தில் ஒரு பிரத்யேக வசதி மையமும் உருவாக்கப்பட்டு, ஒற்றை சாளர முறையில் சலுகைகள், இணக்கச் சான்றுகள் மற்றும் வணிக ஆதரவு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை