உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆயிரம் சந்தேகங்கள் : தங்கம் விலை குறையுமா நகை வாங்கி வைக்கலாமா?

ஆயிரம் சந்தேகங்கள் : தங்கம் விலை குறையுமா நகை வாங்கி வைக்கலாமா?

நான் வாங்கிய வாகன கடனுக்கு, இரண்டு முறை தவணை தொகையை கட்டமுடியாமல் போய்விட்டது. அதனால், பாதிக்கப்பட்ட என்னுடைய 'சிபில்' ஸ்கோரை இன்னும் உயர்த்த முடியவில்லை. புதிய கடன் எதுவும் வாங்க முடியாமல் சிரமப்படுகிறேன். என்ன செய்யலாம்?

ஆர். மதிராஜ்,வள்ளலார் நகர், சென்னை.ஏதேனும் உடல்நலக் கேடு வந்தால், கைவைத்தியம் பார்த்துக்கொள்வது நமது பழக்கம். ஆனால், பெரும்பாலான சமயங்களில் நோய் தீர்வதில்லை. மருத்துவரைத் தான் நாடுகிறோம். அதேபோல், நானும் இதேபோன்ற கிரெடிட் ஸ்கோர் தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஆனாலும் வற்றாத ஜீவநதி போல், ஒவ்வொருமுறையும் அதே விதமான கேள்விகளே வருகின்றன. நோய்க்கான மருத்துவர் போல், இப்போது நிறைய கடன் ஆலோசனை நிறுவனங்கள் வந்துள்ளன. ஆங்கிலத்தில் 'கிரெடிட் கவுன்சிலிங்' என்று பெயர். இவற்றில் எவை சிறந்தவை என்று என்னிடம் ஆலோசனை கேட்க வேண்டாம். நீங்கள் கொஞ்சம் இணையத்தில் அலசி ஆராய்ந்து, உரிய நிறுவனங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அவர்களால், உங்கள் கடன் தொடர்பான, கிரெடிட் ரேட்டிங் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உரிய வழிமுறைகளை வழங்க முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ காப்பீடுக் கான பிரீமியம் தொகையும் உயர்கிறதே? இத்தனைக்கும் நான் இந்த காப்பீடு வசதியைப் பயன்படுத்தியதே இல்லை .

வெ. அப்பாகண்ணு,திருவள்ளூர்.அதற்காக வருந்த வேண்டாம்; மகிழ்ச்சி அடையுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள். பிரீமியம் தொகை உயர்வதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தியாவில் மருத்துவ பணவீக்கம் 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மருத்துவ சேவைகள், அறுவை சிகிச்சைகள், மருத்துவமனை கட்டணங்கள் உள்ளிட்டவை, அதற்கு முந்தைய ஆண்டு கட்டணங்களில் இருந்து தோராயமாக 14 சதவீதம் அதிகரித்து வருகிறது. மேலும், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகள் வயது கூடும்போதும், உங்களுடைய நோய் பாதிப்பு அபாயம் உயர்கிறது. சமீபத்தில் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., ஏற்கனவே உள்ள நோய்களின் சிகிச்சைக்கான காத்திருப்பு காலத்தை 4 ஆண்டுகளில் இருந்து 3 ஆக குறைத்துள்ளது. இவையெல்லாம் சேர்ந்துகொள்ள, இந்த ஆண்டு கூட 15 சதவீதம் அளவுக்கு மருத்துவ காப்பீடின் பிரீமியம் தொகை உயரக்கூடும் என்று கருதப்படுகிறது. மருத்துவ துறையில், காப்பீடு நிறுவனங்கள் தான் தரப்படுத்தலை, ஒழுங்குமுறையை, சீர்படுத்தலைக் கொண்டு வருகின்றன. இதன் மறுபக்கம், கடுமையான பிரீமியம் உயர்வு. இந்தியாவை பொறுத்தவரை, இதற்கு இரண்டே தீர்வு தான் உண்டு. ஒன்று நோய் வராமல், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது. அல்லது, அரசு மருத்துவமனை கட்டமைப்பை மென்மேலும் செம்மைப்படுத்துவது.

அட்சய திருதியை ஒட்டி தங்கம் விலை குறையுமா? நகை வாங்கி வைக்கலாமா?

பி. ஸ்மிதா அக்ஷய், நங்கநல்லுார், சென்னை.குறைய வாய்ப்பில்லை. ஆனால், இந்த ஆண்டுக்குள்ளேயே கணிசமாக உயர வாய்ப்புண்டு என்று 'கோல்டுமேன் சாக்ஸ்' என்ற முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் நவம்பர் முதல் குறைய ஆரம்பிக்கும். இந்தியா உள்பட பல சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், பல்வேறு பாதிப்புகளை எதிர்பார்ப்பதால், இப்போதே, தங்கத்தை வாங்கிச் சேமித்து வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலும், அநித்திய நிலையை ஏற்படுத்திஉள்ளது. இதனால், தற்போது ஒரு அவுன்ஸ் 2,304.40 டாலர் விற்கக்கூடிய தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 2,700 டாலரும், இன்னும் சூழல் மோசமானால் 3,130 டாலர் வரையும் கூட உயரக்கூடும் என்று தெரிவித்து உள்ளது கோல்டுமேன் சாக்ஸ். அதனால் பணம் இருக்கும்போது, நகை வாங்கி வையுங்கள். எதிர்கால உலகச் சூழல், நாம் நினைப்பது போல், சுமூகமாக இருக்கப் போவதில்லை. அப்போதைய பாதுகாப்பு அரணாக, தங்கம் செயல்படக்கூடும்.

ஒரு சில தனியார் நிதி நிறுவனங்கள் 8.85 சதவீதம், 9.30 சதவீதம் வட்டி தருகின்றனவே. இவற்றை நம்பி முதலீடு செய்யலாமா?

ஆர். நரசிம்மன், கும்பகோணம்.வங்கி சாரா நிதி நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் 12 முதல் 60 மாத கால அளவில் வழங்கும் வட்டி விகிதங்களைக் குறிப்பிடுகிறீர்கள். வழக்கமான வங்கி வைப்பு நிதித் திட்டத்தை விட, இவற்றுக்கான ரிஸ்க் சற்று அதிகம் தான். ஆனால், இத்தகைய வைப்பு நிதியின் கிரெடிட் ரேட்டிங் என்னவென்று பாருங்கள். பெரும்பாலும் 'டபுள் ஏ' அல்லது 'டிரிபிள் ஏ' இருக்குமானால், ஓரளவுக்குப் பாதுகாப்பான நிறுவனங்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இன்றைக்கு சந்தையில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அவர்களுக்குக் கடன் கொடுக்கும் அளவுக்கு போதுமான நிதி, இத்தகைய தனியார் நிறுவனங்களிடம் இல்லை. அதனால், பொதுமக்களுக்குக் கூடுதல் வட்டி கொடுத்து, முதலீட்டை ஈர்க்க முயற்சி செய்கின்றன. இத்தகைய வைப்புநிதித் திட்டங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையான 'டெபாசிட் காப்பீடு' இல்லை என்பது ஞாபகமிருக்கட்டும்.

கார் காப்பீடூ வாங்கும்போது, 'பே ஆஸ் யூ டிரைவ்' என்றொரு திட்டம் இருப்பதாகச் சொல்கிறார்களே. அது என்ன? இ.மிருதுளா மகாதேவன், கோவை.

எவ்வளவு தூரம் நீங்கள் வண்டி ஓட்டுவீர்களோ, அதற்கு மட்டும் காப்பீடு எடுத்துக்கொள்வது தான் இந்தத் திட்டம். பல முன்னணி வாகன காப்பீடு நிறுவனங்கள், இந்த வகை காப்பீடை வழங்குகின்றன. உதாரணமாக, உங்கள் கார் அடுத்த ஓராண்டில் 5,000 கி.மீ., தான் ஓடப் போகிறது என்று கருதுகிறீர்கள் என்றால், அதற்கேற்ப இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். காப்பீடு எடுப்பதற்கு முன்பும், புதுப்பிக்கும் போதும், கார் ஓடோமீட்டர் எண்களை நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். நகரங்களில், பலரும் மிகக் குறுகிய தூரமே வண்டி ஓட்டுகின்றனர், அல்லது வீட்டில் இருந்தே பணியாற்றுகின்றனர், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்திருக்கின்றனர். இவர்கள் முழு வாகன காப்பீடு எடுக்கவேண்டியதில்லை. குறைவாக ஓட்டினீர்கள் என்றால், குறைவான இன்ஷூரன்ஸ் பிரிமீயம் கட்டினால் போதும். ஒருவேளை நீங்கள் திட்டமிட்ட கி.மீட்டரை விட கூடுதலான தூரத்துக்கு கார் ஓடும் என்று தோன்றினால், அப்போது 'டாப் அப்'பும் செய்துகொள்ளலாம்.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.comph98410 53881


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை