மழை மற்றும் விலை உயர்வால் ஏப்ரலில் ஏசி விற்பனை மந்தம்
புதுடில்லி:மழை மற்றும் 5 சதவீத விலை உயர்வின் எதிரொலியாக 'ஏசி' விற்பனை இம்மாதம் பாதிக்கப்படக்கூடும் என தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர். தென்னிந்தியாவில் பெய்த இடைவிடாத மழை, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் பெய்த சமீபத்திய இடியுடன் கூடிய மழை, இம்மாதத்தில் 'ஏசி' விற்பனையின் வேகத்தை குறைத்துள்ளன. ஆனால், சமீபத்திய வானிலை அறிக்கையில், கோடைகாலத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளதால், 'ஏசி' விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என தொழிற்துறையினர் எதிர்பார்க்கின்றனர். மூலப்பொருட்கள் உள்ளீட்டு செலவு மற்றும் நாணய மாற்று ஏற்ற, இறக்கங்களின் தாக்கத்தால், சாம்சங் மற்றும் ஹயர் போன்ற நிறுவனங்கள் 'ஏசி' விலைகளை இம்மாதம் உயர்த்த திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே, ப்ளூ ஸ்டார் 5 சதவீதம் வரை விலையை அதிகரித்துஉள்ளது. தற்போது 'ஏசி' விற்பனை மந்தமாக இருந்தாலும், இம்மாத இறுதிக்குள் விற்பனை அதிகரிக்கும் எனவும், மேலும், கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்பாண்டு ஏப்ரலில் 10 முதல் 15 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் எனவும் தொழிற்துறையினர் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர்.