ஏர்டெல் புதிய சி.இ.ஓ., ஷாஸ்வத் ஷர்மா
புதுடில்லி: நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான 'ஏர்டெல்'லின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஷாஸ்வத் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வரும் ஜனவரி 1ம் தேதி அவர் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தற்போது துணை தலைவராக உள்ள கோபால் விட்டல், நிர்வாக துணை தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைமை நிதி அதிகாரி சௌமென் ரேய், குழும தலைமை செயல் அதிகாரியாகவும்; அகில் கார்க் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஐந்து ஆண்டு காலத்துக்கு இந்த பொறுப்பில் செயல்படுவார்கள் என்றும், இந்த நியமனங்கள் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.