ரூ.712 கோடி மதிப்பிலான 17 திட்டங்களுக்கு ஒப்புதல்
சென்னை:புதிய முதலீட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த, 'மெப்ஸ் எஸ்.இ.இசட்' எனப்படும் மெட்ராஸ் ஏற்றுமதி மண்டலம் - சிறப்பு பொருளாதார மண்டல ஒப்புதல் குழு கூட்டம், அதன் ஆணையர் அலெக்ஸ்பால் மேனன் தலைமையில் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் உற்பத்தி, சரக்கு போக்குவரத்து மற்றும் சேவை துறைகளில் உள்ள ஏற்றுமதி சார்ந்த பிரிவுகளை உள்ளடக்கிய 17 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளன. சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 66 கோடி ரூபாய், ஏற்றுமதி சார்ந்த பிரிவுகளில், 646 கோடி ரூபாய் உட்பட மொத்தம், 712 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. முக்கிய ஒப்புதல்களில், கிருஷ்ணகிரியில் உள்ள, 'சிப்காட்' சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 'மைவா லைப்சயின்ஸ்' நிறுவனம், 627 கோடி ரூபாய் முதலீட்டுடன், அதிகபட்ச முதலீட்டு ஒப்புதலை பெற்றுள்ளது. இதன் வாயிலாக, 570 வேலைவாய்ப்புகள் உருவாகும்.