செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மூலப்பொருள் இறக்குமதியில் சவால்
திருப்பூர்: ஜவுளி துறைக்கான தரக் கட்டுப்பாடு உத்தரவுகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என, ஆடை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். பொருட்கள் இறக்குமதிக்கு, இந்திய தரநிலைகள் பணியகமான பி.ஐ.எஸ்., வழங்கும் தரக் கட்டுப்பாடு ஆணை கட்டாயமாகிறது. தயாரிப்பு தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கிய இத்தகைய கட்டுப்பாடு, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு சவாலாக மாறியுள்ளது என திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துஉள்ளனர். சமீபத்தில் திருப்பூர் வந்த மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இயக்குநர் வினம்ரா மிஸ்ராவிடம், தற்போதைய தரக் கட்டுப்பாடு உத்தரவுகள் 100 சதவீதம் எதிர்மறையாக இருப்பதாகவும், அதை மாற்றி அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர். ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: அனைத்து ஜவுளி மூலப்பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தரக் கட்டுப்பாட்டு ஆணை அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி வளராமல் இருக்க, மூலப்பொருள் தட்டுப்பாடே காரணம். உலக அளவில் பருத்தி மற்றும் செயற்கை நுாலிழை தயாரிப்புக்கான மூலப்பொருள் உற்பத்தி, 80 சதவீதம் சீனாவில் நடக்கிறது. இந்தியாவில் கிடைக்காத மூலப்பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதியில்லை. மூலப்பொருட்களை இறக்குமதி செய்தால், உள்நாட்டில் உற்பத்தி செய்யலாம்; வேலைவாய்ப்பு கிடைக்கும்; ஆனால் அனுமதியில்லை. சீனாவிடம் இருந்து துணியை இறக்குமதி செய்கிறோம். இத்தகைய தடை, இந்திய ஆடை ஏற்றுமதி வர்த்தகத்துக்கு, 100 சதவீதம் எதிர்மறையானது. உள்நாட்டில் கிடைக்காத ஜவுளி சார்ந்த மூலப்பொருட்களை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வகையில், தரக் கட்டுப்பாட்டு ஆணையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அப்போதுதான், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் இந்தியா முன்னேற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.