தொழில் பூங்காவில் குழந்தைகள் காப்பகம் சிப்காட் - பிக்கி இடையே ஒப்பந்தம்
சென்னை:தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி, 17 சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைப்பதற்காக, சிப்காட் நிறுவனம் மற்றும், 'பிக்கி' இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம், தொழில் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில் சென்னையில் நேற்று கையெழுத்தானது.பெண் தொழிலாளர்கள் பயன்பெற, மாநிலம் முழுதும் உள்ள 17 தொழில் பூங்காக்களில், குழந்தைகள் காப்பகங்களை துவக்க சிப்காட் திட்டமிட்டுள்ளது.இந்த காப்பகங்கள் பணிபுரியும் பெற்றோரின் குறிப்பாக, பெண்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்ற கூடிய சூழலை உருவாக்கவும் துவக்கப்பட உள்ளன.ஏற்கனவே 13 தொழில் பூங்காக்களில், 63 குழந்தைகள் காப்பகங்கள் பல்வேறு தொழிற்சாலைகள் வாயிலாக நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றால், 1.50 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுகின்றனர்.தற்போது, 17 தொழில் பூங்காக்களில் புதிதாக ஏற்படுத்தப்படும் குழந்தைகள் காப்பகங்களின் வாயிலாக, 3.23 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்.இந்த காப்பகங்களை, 'பிக்கி' எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் பெண்கள் பிரிவுடன் இணைந்து, சிப்காட் நடத்த உள்ளது. இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை சிப்காட் உருவாக்கும். அவற்றில் குழந்தைகள் காப்பகங்களை, பிக்கி அமைப்பு பராமரிக்கும். இந்த காப்பகங்கள், 2017 மகப்பேறு நன்மை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் செயல்படும்.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சிப்காட் மேலாண் இயக்குனர் செந்தில்ராஜ், பிக்கி சென்னை பெண்கள் பிரிவின் தலைவர் திவ்யா அபிஷேக் ஆகியோர் அமைச்சர் ராஜா முன்னிலையில் நேற்று கையெழுத்திட்டனர்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜா பேசியதாவது:இந்தியா முழுதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில், 43 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.இது, இந்திய தொழில் துறை வளர்ச்சிக்கு, தமிழக பெண் தொழிலாளர்களின் விலைமதிப்பற்ற பங்கை பறைசாற்றுகிறது. சிப்காட், 17 தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பக வசதியை அறிமுகம் செய்வது, உழைக்கும் பெண்களின், குறிப்பாக தாய்மார்களின் தனிப்பட்ட பணிச்சுமையை குறைப்பதற்கான சிறப்பான திட்டம்.இவ்வாறு அவர் கூறினார்.