10 லட்சம் பேருக்கு வேலை சி.ஐ.ஐ., இலக்கு நிர்ணயம்
'நாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலை அளிக்க, சி.ஐ.ஐ., இலக்கு நிர்ணயித்துள்ளது' என, அதன் செயல் இயக்குநர் சவுகதா ராய் சவுத்ரி தெரிவித்தார். பெருநகர தொழில் துறையினருக்கும், கல்வியாளர்களுக்குமான ஒருங்கிணைப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, நேற்று இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., சார்பில் சென்னையில் நடந்தது. அதில், அவர் பேசியதாவது: சி.ஐ.ஐ., - ஐ.டி.சி., ஹோட்டல்கள், ஈ.எச்.எல்., ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிகள் வாயிலாக, 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படித்து முடித்தபின், வேலை தேடுவதற்குப் பதில், வேலை சார்ந்து படிப்பது, வேலைக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்வது உள்ளிட்ட திறன்களை வளர்க்க பயிற்சி அளிக்கிறோம். இதற்காக, மல்டிமீடியா, ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம், சுயவேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை, அந்தந்த துறையினரைக் கொண்டு பயிற்சி அளிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.