உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜனவரியில் நாட்டின் வணிக வளர்ச்சி 14 மாதங்களில் இல்லாத குறைவு

ஜனவரியில் நாட்டின் வணிக வளர்ச்சி 14 மாதங்களில் இல்லாத குறைவு

புதுடில்லி:ஜனவரி மாதத்தில் இந்தியாவின் வணிக வளர்ச்சி, 14 மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக பி.எம்.ஐ., குறியீட்டு தரவுகள் காட்டுகின்றன. நடப்பு மாதத்தில் இந்தியாவின் வணிக செயல்பாடுகள், ஓராண்டுக்கு மேலான அதன் மெதுவான வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளதாக, 'எஸ் அண்டு பி., குளோபல் ' நடத்திய எச்.எஸ்.பி.சி., பிளாஷ் இந்தியா பி.எம்.ஐ., குறியீடு தெரிவிக்கிறது. நிறுவனங்கள் பணியாளர்களின் பணியமர்த்துதலை அதிகரித்த போதிலும், பொருளாதார செயல்திறனில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்திய பொருளாதாரத்தின் உந்து சக்தியான சேவைத்துறையின் வளர்ச்சி போக்கு, நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சியின் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 6.40 சதவீதமாக குறையும் என அரசு கணிப்புகள் தெரிவிக்கின்றன.ஜனவரி மாதத்தை பொறுத்தவரை தயாரிப்பு துறை பிளாஷ் பி.எம்.ஐ., குறியீடு 58 புள்ளிகளாகவும்; சேவைகள் துறை குறியீடு 56.80 புள்ளிகளாகவும் இருந்தது. இரண்டையும் சேர்த்த கூட்டு பிளாஷ் பி.எம்.ஐ., குறியீடு 57.90 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்; குறைவாக இருந்தால், சரிவை குறிக்கும்.கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் தயாரிப்பு துறை வளர்ச்சி அதிகரித்துள்ளது. சேவைகள் துறை கடந்த 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. கூட்டு பி.எம்.ஐ., குறியீடு கடந்த 2023 நவம்பருக்கு பிறகு மிகக் குறைவாக பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ