டிஸ்காம் உரிமம்: ஆந்திராவின் முன்மாதிரி நடவடிக்கை
ஆந்திர மாநில அரசின் புதிய மின்சார கொள்கை விரைவில் அமலுக்கு வர உள்ளது. இந்த கொள்கையின் வாயிலாக 300 மெகாவாட்டுக்கு மேற்பட்ட மின்சார தேவையுள்ள தனியார் நிறுவனங்கள், 'டிஸ்காம்' எனப்படும் மின்வினியோக நிறுவனத்துக்கான உரிமம் பெற அனுமதி வழங்கப்பட உள்ளது. மின்துறையை சேராத, தனியார் நிறுவனங்களுக்கு இந்த உரிமம் வழங்கும் முதல் மாநிலமாக ஆந்திரா மாறுகிறது. ஆந்திராவில் தகவல் தொழில்நுட்பம், மருந்து தயாரிப்பு மற்றும் உலோக தொழில்கள் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு மின்தேவை அதிகரித்து வருகிறது. அதை பூர்த்தி செய்ய நம்பகமான மற்றும் இடையூறு இல்லாத மின்சாரம் தேவைப்படுவதாக தொழில் துறையினர் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். மின்கொள்முதல் சுதந்திரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொள்கையின் கீழ், இந்நிறுவனங்கள் நேரடியாக மின்சார உற்பத்தி நிறுவனங்களுடன் மின்சாரத்தை வாங்கும் ஒப்பந்தம் செய்து, அரசின் மின்சார நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலையில் இருந்து விடுபடலாம். அதானி குழுமம், கூகுள், புரூக்பீல்டு, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், சிபி டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்கள், ஆந்திராவில் பெரிய அளவிலான தரவு மையங்களை விரிவாக்கம் செய்து வருகின்றன. அரசின் இந்த கொள்கை அவர்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கும். ஆந்திர பிரதேச அரசின் கிழக்கு மண்டல மின்வினியோக நிறுவனத்தின் தலைவர் கூறுகையில் “பெரிய டேட்டா சென்டர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் தனித்துவமான மின்சார தேவையை கருத்தில் கொண்டு, தனியார் நிறுவனங்களுக்கு, ஆந்திர பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் டிஸ்காம் உரிமம் பெற அனுமதி அளிக்க உள்ளோம்,” என்றார். மேலும், தனியார் நிறுவனங்கள் தனியாக மின்பாதை அமைக்க வேண்டியதில்லை என்றும், மாநில மின்பகிர்மான நிறுவனத்தின் நெட்வொர்க்கை கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஒரே பகுதியில் பல டிஸ்காம் நிறுவனங்கள் செயல்படும் சூழலில், மின்சார கட்டணங்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்புகளை மாநில ஒழுங்குமுறை ஆணையமே நிர்ணயிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொழில்துறை வரவேற்பு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலம் மின்சார பயன்பாட்டை முற்றிலும் மாற்றி விட்டது. ஒரு டேட்டா சென்டர் தொடங்கியவுடன் அதன் மின்சார தேவைகள் பல மடங்கு உயரும். போட்டித்திறன் கொண்ட மின்சார கட்டணம் செயல்பாட்டு செலவுகளை கட்டுப்படுத்த இது உதவும் என தொழில் துறையினர் வரவேற்கின்றனர். சர்வதேச எரிசக்தி முகமை வெளியிட்ட அறிக்கையின்படி, 2030ம் ஆண்டுக்குள் டேட்டா சென்டர்களின் உலகளாவிய மின்சார பயன்பாடு இருமடங்காக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ., பயன்பாடு அதிகரிப்பதால், உயர் திறன் சர்வர்கள் பயன்பாடு அதிகரித்து, மின்சார தேவையும் வேகமாக உயரும் என அறிக்கை தெரிவிக்கிறது. எதிர்கால சவால்கள் எலான் மஸ்க்கின் நிறுவனங்கள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை உலகளவில் விண்வெளி மற்றும் கடலடி தரவு மையங்களை ஆய்வு செய்து வருவது, மின்சாரம் மற்றும் நீர் தேவையின் சூழலை வெளிப்படுத்துகிறது. இந்நிலையில், மின்சார உரிமங்களை கட்டுப்பாட்டுடன் வழங்க வேண்டியது அவசியம் என்றும், அது மதுபான உரிமம் போல கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆந்திர பிரதேசத்தின் இந்த புதிய முயற்சி, இந்திய மின்சார துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏ.ஐ., மற்றும் டேட்டா சென்டர் வளர்ச்சியை முன்னிட்டு, இந்த கொள்கை மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக அமைய ஆந்திர அரசின் நடவடிக்கை வழிகாட்டியாக வாய்ப்பு உள்ளது. டிஸ்காம் என்றால் என்ன? 'டிஸ்காம்' என்பது மின்சார வினியோகத்தின் இறுதி கட்டமாக செயல்படும் நிறுவனம். மின்சார சட்டம் 2003ன் கீழ், மத்திய மின்சார அமைச்சகம் உரிமம் வழங்கும் விதிகளை வகுக்கிறது. தற்போது இந்தியாவில் சுமார் 80 சதவீத டிஸ்காம் உரிமங்கள் அரசு நிறுவனங்களிடமே உள்ளன. சில பகுதிகளில் மட்டும் டாடா பவர் போன்ற தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.