உள்ளூர் செய்திகள்

துளிகள்

இரும்பு தாது உற்பத்தி ஏப்ரலில் வளர்ச்சி

பொதுத்துறை நிறுவனமான என்.எம்.டி.சி., கடந்த ஏப்ரலில் இரும்பு தாது உற்பத்தியில் 15 சதவீதம் உயர்வை பதிவு செய்து சாதனை படைத்துள்ளதாகவும், விற்பனையும் 3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருப்பதாவது: கடந்த ஏப்ரலில் இரும்பு தாது உற்பத்தி, 40 லட்சம் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 34.8 லட்சம் டன்னாக இருந்தது. அதேபோன்று, கடந்த மாதத்தின் விற்பனையும் 36.3 லட்சம் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் ஏப்ரலில் 35.3 லட்சம் டன்னாக இருந்தது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

இரண்டு புதிய நெல் ரகங்கள் அறிமுகம்

காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளவும், அரிசி விளைச்சலை 30 சதவீதம் வரை அதிகரிக்கவும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கிய முதல் மரபணு திருத்தப் பட்ட இரு நெல் வகைகளை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் வெளியிட்டார். இந்த இரண்டு புதிய வகை நெல்கள் அரிசி விளைச்சலை அதிகரிப்பதுடன், தண்ணீரையும் சேமிக்கும் என்று அமைச்சர் கூறினார். இந்த அரிசி வகைகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடாக, தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட நெல் விளைச்சல் முக்கியமாக உள்ள மாநிலங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 4,223 கோடி முதலீடு

சாதகமான உலகளாவிய சூழல், வலுவான உள்நாட்டு மூலாதாரம் ஆகியவற்றின் காரணமாக, கடந்த மூன்று மாதங்களுக்குப் பின், அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய பங்கு சந்தைகளில் 4,223 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.தரவுகளின்படி, கடந்த ஜனவரியில் 78,027 கோடி, பிப்ரவரியில் 34,574 கோடி ரூபாய், மார்ச்சில் 3,973 கோடி ரூபாய் என நிகர வெளியேற்றத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில், இந்திய பங்கு சந்தைகளில் 4,223 கோடி ரூபாய் நிகர முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் செய்துள்ளனர். இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை வெளிப்படுத்துவதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சரக்கு லாரிவாடகை 6 சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஏப்ரலில், நாடு முழுதும் கனரக சரக்கு லாரிகளுக்கான வாடகை 4 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்ததாக, இந்திய போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, கொல்கட்டா, குவஹாத்தி உள்ளிட்ட நாட்டின் 11 பெருநகர பாதைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில், 4 முதல் 4.5 சதவீதமும்; இதர பகுதிகளில், 5.5 முதல் 6 சதவீதம் வரையிலும் லாரி வாடகை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து துறைகளின் நுகர்வு அதிகரிப்பால் சரக்கு போக்குவரத்து அதிகரித்திருப்தே இந்த வாடகை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !