துளிகள்
பார்தி ஏர்டெல் - ஐ.பி.எம்., கூட்டு பார்தி ஏர்டெல் நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப சேவை நிறுவனமான ஐ.பி.எம்., உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் வாயிலாக, ஐ.பி.எம்., நிறுவன சேவைகளை, ஏர்டெல் தன் கிளவுட் தளம் வாயிலாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு நிறுவனங்களும் இணைந்து, சென்னை மற்றும் மும்பையில் இரண்டு கிளவுட் உள்கட்டமைப்பு மையங்களை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளன. ஏ.ஐ., பயன்பாடு பரவலாகி வரும் நிலையில், உள்நாட்டில் தரவு சேமிப்பு வசதிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் கிளவுட் சேவைகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. ஹூண்டாய் இந்தியா புதிய சி.இ.ஓ., ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக தருண் கார்கை நியமிக்க, நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது தலைமை செயல்பாட்டு அலுவலராக பணியாற்றி வரும் தருண் கார்க், அடுத்தாண்டு ஜனவரி முதல் சி.இ.ஓ., வாக பதவியேற்பார். ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய வணிகத்துக்கு இந்தியர் ஒருவர் தலைமை வகிக்க இருப்பது இதுவே முதல்முறை. தற்போது ஹூண்டாய் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள உன்சூ கிம், தென் கொரியாவில் உள்ள தாய் நிறுவனத்தில் முக்கிய பணிக்காக திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். டாடா சன்ஸ் மறுப்பு டாடா சன்ஸ் நிறுவனத்தை பட்டியலிட வேண்டும் என்ற ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் விருப்பத்துக்கு, டாடா டிரஸ்ட்ஸ் செவி சாய்க்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்பட்சத்தில், டாடா குழுமத்தின் உள் விவகாரங்களில் டிரஸ்டின் வாக்குரிமை பாதிப்புக்குள்ளாகும் என்ற காரணத்தால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம், பங்குகளை விற்று தன் கடனை அடைக்கவே பட்டியலிட ஆர்வம் காட்டுகிறது என டாடா டிரஸ்ட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் காலகட்டத்தில் ஷபூர்ஜி குழுமம் வெளியேறும் வாய்ப்புகள் ஆராயப்படுவதாக கூறப்படுகிறது. வரி விலக்கு கோரும் ஆப்பிள் ஐபோன் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் அதி நவீன இயந்திரங்களுக்கு, வரி விலக்கு அளிக்குமாறு ஆப்பிள் நிறுவனம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், ஐபோன் தயாரிப்புக்கான முக்கிய மையமாக இந்தியாவை உருவாக்கி வருகிறது. ஐபோன் உற்பத்திக்காக பாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், இதில் குறிப்பிட்ட பகுதி அதிநவீன இயந்திரங்கள் வாங்கவே செலவிடப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்திடம் உள்ள இயந்திரங்களை வழங்கலாம் என்றால், இந்திய வருமான வரிச் சட்டம் 1961ன் படி, வெளிநாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான உபகரணங்களை பயன்படுத்த, வரி செலுத்த வேண்டும். எனவே, வரி விலக்கு வழங்குமாறு ஆப்பிள் கேட்டுள்ளது.