பெட்ரோலில் எத்தனால் கலப்பு 18.20 சதவீதத்தை எட்டியது டிசம்பரில் வரலாற்று உச்சம்
புதுடில்லி:பெட்ரோலில் எத்தனால் கலப்பு அளவு இதுவரை இல்லாத அதிகபட்சமாக, கடந்த டிசம்பர் மாதத்தில் 18.20 சதவீதத்தை தொட்டது.இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்கிலும், பெட்ரோலில் எத்தனால் கலப்பு துவங்கப்பட்டது. 2025 - 26 நிதி ஆண்டு இறுதிக்குள், பெட்ரோலில் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.படிப்படியாக எத்தனால் கலப்பு அதிகரித்து வந்த நிலையில், டிசம்பரில் இதுவரை இல்லாத அளவாக 18.20 சதவீதத்தை எட்டியது. இதற்காக, 76.60 கோடி லிட்டர் எத்தனால் பயன்படுத்தப்பட்டுள்ளது.நவம்பர், டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் பெட்ரோலில் கலப்பதற்கு, 140.80 கோடி லிட்டர் எத்தனால் பயன்படுத்தப்பட்டது. இதற்காக, பொதுத் துறையைச் சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்கள், மொத்தம் 109.10 கோடி லிட்டர் எத்தனாலை, கடந்த நவம்பர், டிசம்பரில் கொள்முதல் செய்தன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில், பெட்ரோலில் எத்தனால் கலப்பு திட்டத்தின் வாயிலாக, கடந்த செப்டம்பர் மாதம் வரை விவசாயிகளுக்கு 92,409 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எத்தனால் திட்டத்தால், 185 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி தவிர்க்கப்பட்டு, 1.08 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி மிச்சப்படுத்தப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எத்தனால் கலப்பு திட்டத்தின் வாயிலாக, 557 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.1,683 கோடி லிட்டர்நாட்டின் தற்போதைய எத்தனால் உற்பத்தி திறன் ரூ.92,409 கோடிகடந்த செப்டம்பர் வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை 185 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி தவிர்க்கப்பட்டுள்ளதுரூ.1.08 லட்சம் கோடி மிச்சப்பட்டுத்தப்பட்ட அன்னிய செலாவணி